பறக்கும் படையிடம் இதுவரை சிக்கியது... ரூ . 5.97 கோடி! 5.06 கோடி ரூபாய் திருப்பி ஒப்படைப்பு
கோவை, மாவட்டத்தில் பறக்கும் படையினர் கடந்த மார்ச் 15 முதல் நடத்திய வாகன சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.97 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.5.06 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக, கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விதிமுறைகளின்படி, உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப் பணமோ அல்லது ரூ.2 லட்சத்துக்கு அதிகமான மதிப்புள்ள நகைகளோ எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இந்த சோதனையில் இதுவரை ரூ.5 கோடியே 97 லட்சத்து 49 ஆயிரத்து 40 மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்க நகைகள் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் வியாபாரிகள், திருமண நிகழ்வுகளுக்கு செல்வோர் மற்றும் மருத்துவ அவசர தேவைக்காக பணம் எடுத்து சென்றவர்கள், அதிகம் சிக்கியதாக கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை, தக்க ஆவணம் பெற்று உரியவர்களுக்கு திருப்பி அளிக்க, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டி.ஆர்.டி.ஏ) திட்ட இயக்குனர் தலைமையில், அதிகாரிகள் அடங்கிய மாவட்டக் குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள் வங்கி பணம் எடுத்த ரசீது, ஜி.எஸ்.டி. ரசீது மற்றும் பணம் எதற்காக எடுத்தது குறித்த விளக்கக் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.
திருமண தேவைக்கானவர்கள் அழைப்பிதழ், சொத்து தொடர்பானவர்கள் ஒப்பந்தப் பத்திரம், மருத்துவ செலவுகளுக்கானவர்கள் மருத்துவமனை ரசீது உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து பணம், நகைகளை திரும்ப பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 15 முதல் இதுவரை, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மீட்க ஆவணங்களுடன் 450 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இவற்றில் ஆவணங்களை பரிசோதித்த பின், இதுவரை ரூ.5 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 967 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.91 லட்சத்து 46 ஆயிரத்து 73 நிலுவையில் உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக பிடிபடும் ரொக்கம் மற்றும் பொருட்கள், நேரடியாக வருமான வரித்துறை விசாரணைக்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் ஆவணங்களை சரிபார்த்து அளிக்கும் அனுமதி கடிதம் மூலமே, கருவூலத்தில் இருந்து பணத்தை பெற முடியும்.
2021 சட்டசபை தேர்தலில் ரூ.8 கோடியும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.5 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.