தி.மு.க., ஆதரவு போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற பட்டியல் தயாரிப்பு

சென்னை: தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் அதிகாரிகளை, காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில், சில மாவட்ட எஸ்.பி.,க்கள், - டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், தேர்தல் பணியில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக, தலைமைச் செயலர், டி.ஜி.பி., அலுவலகம், தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்து, சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் புதிய தலைமைச்செயலர் சாய்குமார், டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில், அரசியல் சார்பு போலீஸ் அதிகாரிகளை, தேர்தல் பணிகளில் இருந்து விடுவித்து, காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
அமைச்சர் நேரு துறையில் நடந்த ஊழல் குறித்து, அமலாக்கத் துறை போதிய ஆதாரங்களுடன் கடிதம் எழுதியும், அவர் மீது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. அதே நிலை நீடிக்க, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக, டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதத்தை, அரசு நியமித்தது.

ஆனால், தேர்தல் கமிஷன், அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி விட்டது. ஆயுதப்படை டி.ஜி.பி.,யாக இருந்த கூடுதல் பொறுப்பையும் பறித்து விட்டது.

இந்த இரு பொறுப்புகளுக்கும், மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு டி.ஜி.பி., சந்தீப் மிட்டலை அமர்த்தியது. இவர், ஏற்கனவே பார்லிமென்டில் பணிபுரிந்தவர்; மத்திய அரசில் செல்வாக்குமிக்கவர் என்ற பேச்சு உள்ளது.

இவர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக நீடித்தால், நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்பட்டது. ஆனால், இவரை தேர்தல் கமிஷன், லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து மாற்றிவிட்டது.

தற்போது, ஆயுதப்படை டி.ஜி.பி.,யாக பொறுப்பு வகிக்கிறார். 'டம்மி' பொறுப்பு என்பதால், அதில் இருந்து நீக்கி விட்டு மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறையில் நியமிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனரிடம், சந்தீப் மிட்டல் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கிடையே, தி.மு.க., ஆதரவு போலீஸ் அதிகாரிகளை களையெடுக்க, புதிய தலைமைச் செயலர் பட்டியல் தயாரித்து வருகிறார். தேர்தல் கமிஷன் ஒப்புதல் பெற்ற பின், பணியிட மாற்றம் அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement