நாகர்கோவிலில் பிரதமர் மோடி 'ரோடு ஷோ'

நாகர்கோவில்: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி நேற்று நாகர்கோவிலில் ஒரு மணி நேரம் ரோடு ஷோ நடத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி வரை, மாலை 4:20 முதல் 5:20 மணி வரை, 1 கிலோ மீட்டர் துாரம் இந்த ரோடு ஷோ நடந்தது.

பிரதமர் மோடி சென்ற திறந்த வாகனத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் நின்றனர்.

ரோட்டின் இருபுறமும் குவிந்திருந்த மக்களை பார்த்து கையசைத்தும், கை கூப்பி வணங்கியும், பிரதமர் மோடி ஓட்டு சேகரித்தார்; வழியில், அம்பேத்கர், அண்ணாதுரை ஆகியோர் சிலைகள் மற்றும் எம்.ஜி.ஆர்., படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். சில இடங்களில் தொண்டர்கள் அளித்த போட்டோக்களை வாங்கி, கையெழுத்து போட்டு திரும்ப கொடுத்தார்.

வடசேரியில் வேட்பாளர்களை அறிமுகம் செய்தபோது, நாகர்கோவில் தொகுதி பா.ஜ., வேட்பாளர் காந்தியை, பிரதமர் மோடி கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். பல இடங்களிலும் மோடிக்கு கேட்கும் அளவுக்கு, அண்ணாமலைக்கு ஆதரவாக கோஷங்கள் எழும்பியது.

நாகர்கோவிலில் ஒரு மணி நேரம் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி, 'தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரியுங்கள்' என்று மட்டும் கேட்டுக்கொண்டார்.

Advertisement