ஆளுங்கட்சிக்கு எதிராக திரும்பியுள்ள தபால் ஓட்டுகள்?

2

''அ மைச்சருக்கு கடும் போட்டியை குடுத்துட்டு இருக்காரு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த தொகுதியிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை, ஆலந்துார் தொகுதியில், தி.மு.க., வேட்பாளரா அமைச்சர் அன்பரசன் போட்டியிடுதாரு... இவர், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரை சேர்ந்தவரு வே...

''அ.தி.மு.க., சார்புல, ஜெ., பேரவை மாநில இணை செயலரான, இதே தொகுதியை சேர்ந்த சரவணன் போட்டியிடுதாரு... இவர் வட்ட செயலர், பகுதி செயலர், கவுன்சிலர்னு படிப்படியா வளர்ந்து, கட்சியினர் மற்றும் தொகுதி மக்கள் மத்தியில, நல்ல பெயர் எடுத்திருக்காரு வே...

''அதனாலயே, 'பண பலம் மிக்க அமைச்சர் அன்பரசனை எதிர்த்து, இவரை பழனிசாமி நிறுத்தியிருக்கார்'னு தொகுதி அ.தி.மு.க.,வினர் சொல்லுதாவ... அதுவும் இல்லாம, கூட்டணி கட்சியான, பா.ஜ.,வுக்கு நங்கநல்லுார், ஆதம்பாக்கம் பகுதிகள்ல கணிசமான ஓட்டு வங்கி இருக்கு வே...

''இந்த ஓட்டுகள் எல்லாம் சேர்ந்து சரவணனை ஜெயிக்க வச்சிடும்னு, அ.தி.மு.க.,வினர் நம்புதாவ... சரவணனும், சளைக்காம மக்களை பார்த்து, 'மண்ணின் மைந்தனை ஆதரியுங்க'ன்னு தீவிரமா பிரசாரம் பண்ணிட்டு இருக்கிறதால, அன்பரசன் தரப்பு அரண்டு போயிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.

''நோட்டாவுக்கு திருப்பி விட பார்க்கிறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''திருப்பூர் மாவட்டம், தாராபுரம் - தனி தொகுதியில், தி.மு.க., சார்பில் டாக்டர் இந்திராணி போட்டியிடுறாங்க... தாராபுரம் நகராட்சியில முக்கிய பதவியில் இருக்கிற, தி.மு.க., பிரமுகர் மீது, தொகுதி முழுக்க பலரும் அதிருப்தியில இருக்காங்க...

''அதை எல்லாம் சரிக்கட்டும் பணியில், இந்திராணி இறங்கியிருக்காங்க... இதுக்கு இடையில, இந்திராணி மீது அதிருப்தியில் இருக்கிற நகராட்சி முக்கிய புள்ளி, தன் சமுதாயம் சார்ந்த ஓட்டுகளை, 'நோட்டா'வுக்கு திருப்பி விடும் முயற்சியில் இறங்கியிருக்காராம்...

''இதனால, தலைமை உத்தரவுப்படி கட்சி நிர்வாகிகள் சிலர், நகராட்சி புள்ளியின் செயல்பாடுகளை ரகசியமா கண்காணிச்சுட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''பாப்பு கண்ணன், இப்படி உட்காருங்க...'' என்ற அன்வர்பாயே, ''தபால் ஓட்டுகள் எல்லாம் எதிராவே விழுந்திருக்காம் பா...'' என்றார்.

''யாருக்கு ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''தமிழக சட்டசபை தேர்தல் பணிகள்ல ஈடுபடுற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் எல்லாம் தபால் ஓட்டுகள் போடுவாங்க... பொதுவா, தபால் ஓட்டுகள் எல்லாமே, தி.மு.க.,வுக்கு சாதகமாவே இருக்கும் பா...

''ஆனா, கடந்த அஞ்சு வருஷமா அவங்க கோரிக்கைகளை தி.மு.க., கண்டுக்காம விட்டுட்டதால, அவங்க கோபத்துல இருக்காங்க... இதை கேள்விப்பட்ட தி.மு.க., அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளிடம் பேசி, ஆளுங்கட்சிக்கு ஆதரவா ஓட்டு போடும்படி வலியுறுத்தியிருக்காங்க பா...

''ஆனா, சங்க நிர்வாகிகள் பேச்சை கேட்காத அரசு ஊழியர்கள், 'ஒவ்வொரு முறையும் ஏமாற முடியாது'ன்னு சொல்லி, தபால் ஓட்டுப்பதிவுல ஆளுங்கட்சிக்கு எதிரான தங்களது கோபத்தை காட்டிட்டாங்களாம்... இதை கேள்விப்பட்ட சங்க நிர்வாகிகள், ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதும், அமைச்சர்கள் முகத்துல எப்படி முழிக்கிறதுன்னு தர்மசங்கடத்துல இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement