மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய தடை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்குள், தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அனுமதி இல்லை என, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபயிற்சி மேற்கொள்ள வருவோரிடமும், விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் வீரர் -- வீராங்கனையரிடமும், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் விதியை மீறி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவ தாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மாவட்ட விளையாட்டு மைதானத்திற்குள் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகம் சார்பில், விளையாட்டு அரங்கின் நுழைவாயில் கேட்டில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதில், முக்கிய அறிவிப்பு, விளையாட்டு மைதானத்திற்குள் தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி இல்லை, என குறிப்பிடப்பட்டுள்ளது.