பெயரில் மட்டும் 'நிறை'யூர் தண்ணீர் இன்றி 'குறை'யூர்

திருப்பூர்: பத்து வருஷமா ஒரு குடம் தண்ணியை பத்து ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்குறோம்... -

தாராபுரம் ஒன்றியம், மேற்கு சடையபாளையம் ஊராட்சி, நிறையூர் கிராம மக்களின் இந்த வேதனைக்குரல், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் எதிரொலித்தது.

கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் மனு அளிக்கத் திரண்டு வந்த மக்கள், தங்கள் ஊரில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை விவரித்தனர்.

''35 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு மற்றும் பழுதடைந்த பழைய மேல்நிலை நீர்த்தொட்டி ஆகியவற்றை மட்டுமே நம்பி இருக்கிறோம்; ஒரு மணி நேரத்திற்கு வெறும் 5 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது; ஜல் ஜீவன் போன்ற திட்டங்கள் எட்டாக் கனியாக உள்ள நிலையில், கூலித் தொழிலாளர்கள் குடிநீருக்காகத் தினசரி பெருந்தொகையைச் செலவிட வேண்டியுள்ளது.

காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் அடிக்கடி பழுதாவதுடன், பி.ஏ.பி வாய்க்காலில் நீர் வரும்போது மட்டுமே ஆழ்துளைக் கிணறுகளில் நீர் சுரக்கிறது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு தேவை; மயானம், கழிப்பிடம், ரேஷன் கடை போன்ற அடிப்படை வசதிகளும் தேவை'' என்றனம் இப்பகுதியினர்.

பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

Advertisement