இன்று உங்களுக்கான காலம்... காத்திருக்குது களம்...!

6

- நமது நிருபர் -

வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை என்பது, சோழர் காலத்தில் இருந்துள்ளது. இடைக்கால சோழர்களின் ஆட்சி காலத்தில், கி.பி., 9ம் நுாற்றாண்டு முதல் கி.பி., 16ம் நுாற்றாண்டு இந்த குடவோலை முறை தேர்தல் நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரமாக கி.பி., 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தக சோழன் காலத்துக்கு உட்பட்ட மூன்று கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.

இதில் இரண்டு, காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன. இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் ஓட்டுச்சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவர் முதலாம் பராந்தக சோழன். அன்றில் இருந்து இன்று வரை, ஓட்டுப்பதிவு முக்கியத்துவம் பெற்று வருகிறது.

நாம் அளிக்கிற ஓட்டு, தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டுகளை தீர்மானிக்க உள்ளன. ஜனநாயக அரசமைப்பின் வாயிலாக, நமக்கு கிடைத்திருக்கும் உரிமைகளுக்கான ஆதாரம். திறமையான அரசாங்கமும், அது சார்ந்த அமைப்புகள் அமைய நாமும் ஒரு காரணமாக இருக்க வேண்டும். அப்படி, ஜனநாயகத்தை வலிமைப்படுத்துவதில் நமக்கும் பங்களிப்பு இருக்கிறது என்பதை உணர செய்வது தான் ஓட்டுரிமை. 100 சதவீதம் ஓட்டுரிமை பெறுகிற போது தான், முழுமையான ஜனநாயகம் நமக்கு வந்தடைகிறது.

நம் ஒவ்வொருவருடைய அரசியல் கருத்துகள் வேறுபட்டிருக்கலாம். அரசியல் ரீதியில் நமது விருப்பங்களும், நோக்கங்களும் வேறுபட்டிருக்கலாம். அதை ஜனநாயக வழியில் நின்று வெளிப்படுத்தும் வாய்ப்பை ஓட்டுரிமை வழங்குகிறது. மக்களின் வாழ்வும், எதிர்காலமும், அரசு நிர்வாகங்களையும், அதன் முடிவுகளையுமே நம்பியிருக்கும் அரசியல் களத்தில், மக்களாட்சியில் அங்கம் வகிக்கும் நாம் ஒவ்வொருவரும், தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

ஜனநாயக கடமையை செலுத்த, வெளிநாடுகளில் இருந்து வந்துக் கொண்டிருக்கும் வாக்காளர்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. அதே நேரத்தில், ஓட்டளித்தால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது என்று, இன்று ஓட்டளிக்காமல் இருந்து விட்டு, பின், ஆட்சியாளர்களை குறை கூறுவது எவ்வகையிலும் நியாயம் இல்லை.

இன்று காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, உங்களுக்கான காலம். சிந்தித்து செயல்பட கிடைத்திருக்கும் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.

Advertisement