மகளிர் இட ஒதுக்கீடு: விஜய் வரவேற்பு

1

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்பதாக த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: லோக்சபா எம்.பி.,க்களின் எண்ணிக்கையை 543ல் இருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, ஒரு மசோதாவை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

இந்த மசோதாவை நிறைவேற்றினால், தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.

இதனால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல், கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.

இதனால், தமிழக மக்களின் குரல், லோக்சபாவில் ஒலிக்காமல் போகும். இது, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை.

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து கடைப்பிடித்த தமிழகத்துக்கு தண்டனையும், அதை பின்பற்றாத மாநிலங்களுக்கு வெகுமதியும் கொடுப்பது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது.

லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும். ஏற்கனவே, தமிழகம் நிதி பகிர்வில் இழப்பை சந்தித்து வருவதாக மாநில அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

தொகுதி மறுவரையறைக்கு பின், மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது.

தமிழகத்துக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்பு 131வது திருத்தம் மசோதாவை நிறைவேற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.

அதே நேரத்தில், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை த.வெ.க., வரவேற்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருச்செங்கோட்டில் த.வெ.க., கொள்கை பரப்பு பொதுச்செயலர் அருண்ராஜ், கூறுகையில், “அனைத்து மாநில முதல்வர்களையும் கலந்து பேசிய பின், இந்த மசோதாவை செயல்படுத்த வேண்டும்.

''பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க., இதை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என, தெளிவுபடுத்த வேண்டும். விஜய் முதல்வராக பதவியேற்ற பின், அவரது தலைமையில், மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்,” என்றார்.

Advertisement