கல்குவாரி நீர்நிலைக்கு படையெடுக்கும் இளைஞர்கள்: தடுப்பு வேலி அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டுமென, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கல் குவாரி பள்ளம் உள்ளது. இது 500 அடி வரை ஆழம் உடையது.
இதில் தண்ணீர் நிரம்பி வழி வதால் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், ஒரகடம் மற்றும் சுற்றறியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் இங்கு குளிக்க வார இறுதி நாட்களில் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் இளைஞர்கள் காடுகளுக்கு அருகில் அடுப்பு மூட்டி சமையல் செய்து சாப்பிட்ட பின் மது போதையில் கல்குவாரி பள்ளத்தில் குளித்து வருகின்றனர்.
மேலும் கல்குவாரி பள்ளம் குறித்து விழிப்புணர்வு இல்லாத பெற்றோர்களும் குழந்தைகளுடம் வந்து துணி துவைப்பது, நீச்சல் பழகுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பள்ளி கல்லுாரிகளுக்கு தற்போது கோடை விடுமுறை துவங்கி உள்ளதால் இளைஞர்கள் பொழுது போக்கும் விதமாக இந்த பள்ளத்தில் வந்து குளித்துச் செல்கின்றனர்.
இந்த கல்குவாரி பள்ளம் அருகில் குடியிருப்புகள் ஏதும் இல்லாததால் ஆபத்து காலங்களில் காப்பாற்ற கூட ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்யும் போது யாரும் கண்டுகொள்வதில்லை. கடந்த ஆண்டு மது போதையில் வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
எனவே இந்த கல்குவாரி பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கவும், எச்சரிக்கை பலகை வைத்து யாரும் அருகில் செல்ல முடியாதபடி நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.