கார் முதல் 'கட்டிங்' வரை.. புதுச்சேரியில் 'பெட்டிங்'

புதுச்சேரியில் கடந்த 9ம் தேதியே தேர்தல் முடிந்த நிலையில், அடுத்த மாதம் 4ம் தேதி வெளியாகும் முடிவுக்காக காத்திருக்கின்றனர். ஓட்டுப்பதிவு முடிந்து, 'இ.வி.எம்., மிஷின்கள்' எல்லாம் 'ஸ்ட்ராங் ரூமில்' ஓய்வு எடுக்கின்றன.

மிஷினுக்குள், நம் தலையெழுத்து எப்படி இருக்குமோ என்ற பதற்றத்தில், வேட்பாளர்கள் ஓய்வின்றி கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர். ஓட்டுப்பதிவு சதவீதமும் 91.23 என்ற வரலாற்று சாதனை படைத்ததால், அனைத்து தரப்புமே 'கிலி'யடைந்துள்ளன.

இது ஒருபக்கம் இருக்க, கட்சியினர் மத்தியில் இப்போது வேற லெவல் ஆட்டம் ஆரம்பித்து, தெருவுக்கு தெரு 'பெட்டிங்' கட்டுவது பரவி வருகிறது. கொஞ்சம் வசதி படைத்த குழுக்களில், கார், நகை, கட்டுக்கட்டாக பணம் என சூதாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.

இந்த வேட்பாளர் ஜெயிப்பார் என்பதில் தொடங்கி, இவர் டிபாசிட் இழப்பார்; இந்த தொகுதியில் ஓட்டு வித்தியாசம் இவ்வளவு இருக்கும் என டிசைன் டிசைனாக கணக்கு போட்டு 'பெட்டிங்' கட்டி வருகின்றனர். சில இடங்களில், ஒரு மடங்கு பணத்துக்கு மூன்று மடங்கு தருவதாக, சூதாட்ட ஏஜென்ட் ரேஞ்சுக்கு இறங்கியுள்ளனர்.

இவை எல்லாவற்றையும் விட, மது 'பார்'களில் வித்தியாசமான 'பெட்டிங்' களைகட்டுகிறது. 'மாப்ள... உன் கட்சி தோத்துடுச்சுன்னா எனக்கு ரெண்டு 'புல்' வாங்கித் தரணும். ஒருவேளை ஜெயிச்சுட்டா நான் உனக்கு ஒரு 'குவார்ட்டர்' தரேன்' என கட்டிங், குவார்ட்டர் என முன்வைக்கப்படுகிறது. தேர்தல் முடிவு வரை, கோடை வெயிலுக்கு இணையாக, புதுச்சேரியில், 'பெட்டிங்' அனல் பறக்கிறது.

Advertisement