மக்கள் விரோத தி.மு.க., அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: ஜி.கே.வாசன் பேச்சு கோகுலஇந்திராவுக்கு ஆதரவாக பிரசாரம்
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியின் அ.தி.மு.க., வேட்பாளர் கோகுல இந்திரா, அண்ணா நகரில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, கூட்டணி கட்சியான த.மா.காங்., கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அண்ணா நகர், அரும்பாக்கம் பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க., அரசில், மக்களுக்கு நன்மை தரக்கூடிய அரசு இருந்தது. தி.மு.க., ஆட்சியில், பால், மின்சாரம், சொத்து வரி உள்ளிட்டவற்றின் கட்டணம் உயர்ந்து, தாங்க முடியாத அளவில் மக்கள் துன்பங்களை சந்திந்து வருகின்றனர்.
'நீட்' தேர்வு ரத்து, மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கீடு உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத தி.மு.க., அரசை, மக்கள் அகற்ற வேண்டும். ஆட்சி மாற்றம் அவசியம்; மக்கள் விரோத தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பட வேண்டும்.
அண்ணா நகரில் வணிக வளாகங்கள் அதிகரித்துள்ளன. இங்கு போதிய 'பார்க்கிங்' வசதி, கழிவுநீர் உள்ளிட்ட திட்டங்களை முறையாக கண்டுக்கொள்ளவில்லை.
பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் 100 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். மத்திய, மாநில அரசுகளுடன் நல்ல இணக்கத்துடன் செய்யப்பட்டால் மட்டுமே, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
த.மா.க., மாவட்ட தலைவர் பத்மநாபன், அ.தி.மு.க., பகுதி செயலர்கள் ஹேம்நாத், ராஜ்குமார், பிரசன்னா குமார், சுகுமார் மற்றும் கூட்டணி கட்சியினர் இருந்தனர்.