ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின்... படத்தை பார்க்கலாம்!உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் தீவிரம்

உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்கள், சின்னம் கொண்ட பேலட் பேப்பர் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. உடுமலை தொகுதியில், ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 178 ஆண்கள், ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 771 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 27 என, 2 லட்சத்து, 30 ஆயிரத்து, 976 வாக்காளர்கள் உள்ளனர்.

வரும், 23ம் தேதி நடக்கும் ஓட்டுப்பதிவுக்காக, 132 ஓட்டுப்பதிவு மையங்களில், 307 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில், கே.ராதாகிருஷ்ணன் ( அ.தி.மு.க.,) ம. ராம்குமார் ( நாம் தமிழர் கட்சி) மு.ஜெயக்குமார் ( தி.மு.க.,) கே.சங்கர் ( த.வெ.க.,) மற்றும் சுயேட்சைகள் என, 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

உடுமலை தொகுதியில் அமைக்கப்பட உள்ள ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின் போது, பயன்படுத்தவும், பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்றி அமைக்க, ரிசர்வ் என்ற அடிப்படையில், 399 பேலட் யூனிட், 368 கன்ட்ரோல் யூனிட் மற்றும் யாருக்கு ஓட்டளித்தோம் என வாக்காளர்கள் அறிந்து கொள்ளும், 368 'விவிபேட்' இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், உடுமலை அரசு கல்லுாரி வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஓட்டுச்சாவடி வாரியாக, குலுக்கல் முறையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

நேற்று, ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் பேலட் யூனிட்டில், வேட்பாளர் பெயர், போட்டோ, சின்னம் ஆகியவற்றுடன் கூடிய, ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவுரி சங்கர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பேலட் பேப்பர் பொருத்தப்பட்டு, சின்னங்களுக்கு எதிரே உள்ள பட்டன்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்து, சீல் வைக்கப்பட்டது. இப்பணிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் நடந்தது.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், பேலட் பேப்பர் பொருத்தும் பணியை, உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர், தினேஷ் ஸ்ரீ வத்சவா ஆய்வு மேற்கொண்டார்.

மடத்துக்குளம் மடத்துக்குளம் தொகுதியில், ஒரு லட்சத்து, 3 ஆயிரத்து, 252 ஆண்கள், ஒரு லட்சத்து, 11 ஆயிரத்து, 541 பெண்கள், 16 மூன்றாம் பாலினத்தவர் என, 2 லட்சத்து, 14 ஆயிரத்து, 809 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

இத்தொகுதியில், 118 ஓட்டுப்பதிவு மையங்களில், 294 ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. இங்கு, எம். ராதாமணி ( நாம் தமிழர் கட்சி ), ஆர்.ஜெயராமகிருஷ்ணன் (தி.மு.க.,), சி.சண்முகவேலு ( அ.ம.மு.க.,), ஏ.கே.,செந்தில்குமார் ( புதிய தமிழகம் ), ஆர்.திருமலை ( த.வெ.க.,) உள்ளிட்ட, 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மடத்துக்குளம் தொகுதியில், ஓட்டுப்பதிவின் போது பயன்படுத்தவும், ரிசர்வ் என்ற அடிப்படையில், 382 பேலட் யூனிட், 352 கன்ட்ரோல் யூனிட் மற்றும் 352 'விவிபேட்' இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஓட்டுச்சாவடி வாரியாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நேற்று, தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களின் பெயர், சின்னம், போட்டோவுடன் கூடிய, பேலட் பேப்பர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

வழக்கமாக தேர்தல்களில், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் மட்டுமே இடம் பெற்றிருக்கும் நிலையில், தற்போதைய தேர்தலில், வேட்பாளரின் போட்டோவும் இடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Advertisement