சூரிய ஒளி, கூர்மையான பற்களால் வரும் வாய்ப்புற்று நோய் விழிப்புணர்வு அவசியம்

விருதுநகர்;சூரிய ஒளி, கூர்மையான பற்களால் ஏற்படும் நாள்பட்ட புண்களால் வாய்ப்புற்று நோய் பாதிப்பு குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களுக்கு பல்வேறு உடல் நலப்பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால் வெயிலில் அதிக நேரம் வேலை செய்யும் விவசாயிகள், கட்டுமான தொழிலாளர்களுக்கு உதட்டில் புண் ஏற்படுகிறது.

இந்த பாதிப்பு 3 வாரங்களுக்கு மேலாகியும் ஆறாமல் இருந்து நாள்பட்ட பாதிப்பாக மாறி வாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணமாகிறது. மேலும் கூர்மையான பற்களால் தொடர்ந்து நாக்கு, கன்னத்தில் உட்புறங்களில் ஏற்படும் புண் பாதிப்புகளும் நாள்பட்டு இருந்தாலும் வாய்ப்புற்று நோய் ஏற்படுகிறது.

இது குறித்து விருதுநகர் அரசு மருத்துவமனை பல் மருத்துவ சிகிச்சை நிபுணர் பாலமுருகன் கூறியதாவது:

புகைப்பிடித்தல், மது குடித்தல், சூரிய ஒளி, கூர்மையான பற்களாலும் வாய்ப்புற்று நோய் ஏற்படுகிறது. மேலும் சிபிலிஸ் என்ற வாய்ப்புற்று நோய் பாலியல் உறவு மூலம் ஏற்படும். வாய் பகுதி, நாக்கு, ஈறு, மேல் அன்னம் பகுதிகளில் வாய்ப்புற்று நோய் ஏற்படுகிறது. இவற்றில் சின்ன கட்டி போன்று இருத்தல், சாப்பிடுவதில் சிரமம், மதமதப்பு, நாக்கில் வலி, நரம்பு வரை பாதிப்பு, காது வலி ஆகியவை வாய்ப்புற்று நோய்க்கான அறிகுறிகள்.

வெற்றிலை,பாக்கு சாப்பிடுபவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். மேலும் வாய் பகுதியில் வெள்ளை, சிவப்பு படலங்கள் இருத்தல், ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு குறைவாக இருந்தாலும் வாய்ப்புகள் அதிகம். 45 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

2025, 2026ல் இதுவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளது. வாய்ப்புற்று நோய் பாதிப்பை முன்கூட்டியே தடுக்க 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் 6 மாதங்கள், ஒராண்டுக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், என்றார்.

Advertisement