ரூ.60 லட்சம் நிலமோசடி : உறவினர்கள் இருவர் கைது

ஆவடி: பெண்ணின் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்று, மோசடியில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் கைது செய்தனர்.

கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சரளா பாய், 45. ஆவடி அடுத்த பொத்துாரில் 35 சென்ட் பரப்பில், இவரது கணவர் ஸ்ரீனிவாசனின் குடும்ப சொத்து உள்ளது.

கடந்த 2007ல் ஸ்ரீனிவாசன் இறந்த நிலையில், சரளா பாய்க்கு சொத்தில் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீனிவாசன் திருமணம் செய்து கொள்ளாமல் இறந்ததாக, அவரது குடும்பத்தினர் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர்.

பின், கணவரின் அண்ணன் தனசேகரன், அக்கா கவுசல்யா, பெரியப்பா ராஜ மாணிக்கம், அவரது வாரிசுகள் சத்தியமூர்த்தி, ரங்கநாயகி, புவனேஸ்வரி, சரஸ்வதி, கண்ணன், ஆனந்த செல்வி, புஷ்பராஜ், அய்யப்பன், கோமளா தேவி, உஷா தேவி, ருக்மணிதேவி, ரமணி தேவி ஆகியோர் மேற்படி நிலத்தை சரளா பாய்க்கு தெரியாமல், இருவருக்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மதிப்பு 60 லட்சம் ரூபாய்.

இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவில் சரளா பாய் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார் விசாரித்து, மோசடியில் ஈடுபட்ட பட்டாபிராம், தண்டுரை பகுதியைச் சேர்ந்த தனசேகரன், 66, திருவள்ளூர் கண்ணன், 55 ஆகியோரை, நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement