ஆயிரம் சந்தேகங்கள்: தெரியாதவரின் பணம் வங்கி கணக்குக்கு வந்தால் என்ன செய்யலாம்?

ஒரு வீட்டு வசதி நிறுவனத்தில் 8.80 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளேன். ஆர்.பி.ஐ. பலமுறை ரெப்போ வட்டியை குறைத்தும், நான் அதன் பலனை அனுபவிக்காமல், கூடுதலாக வட்டி கட்டி வருகிறேன். தற்போதைய ரெப்போ 5.25 சதவீதம். நான் யாரிடம் முறையிடுவது?

எஸ்.ரவிசங்கர், குரோம்பேட்டை

ரெப்போ விகிதம் அடிப்படையிலான கடனுக்கான வட்டி விகித நிர்ணயம் என்பது ஒரு வழிமுறை, 'பிரைம் லெண்டிங் ரேட்' முறையில் வட்டியை நிர்ணயிப்பது இன்னொரு முறை.

நீங்கள் தெரிவிக்கும் வீட்டு வசதி நிறுவனம், இரண்டாவது வழிமுறையைப் பின்பற்றுகிறது. ரெப்போ விகிதம் குறையும் போது, இவர்களது வட்டி விகிதம் தானாகவே குறையாது.

அதனால், உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. நீங்கள் கடன் வாங்கியிருக்கும் நிறுவனத்திற்கே போய், தற்போதைய வட்டி விகிதத்துக்கு உங்கள் கடனை மாற்றித்தர கேளுங்கள்.

அதற்கு 'மாற்று கட்டணம்' என்று தொகையை கட்டச்சொல்வர். அல்லது, ரெப்போ விகிதத்தின் அடிப்படையில் கடன் கொடுக்கும் வேறு வங்கிகளுக்கு உங்கள் கடனை மாற்றிக்கொள்ளலாம்.

முன்பின் தெரியாத நபரிடமிருந்து என் சேமிப்பு கணக்கில், 'நெப்ட்' முறையில் 75,000 ரூபாய் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது. திருப்பி அனுப்ப கோருகிறார். என்ன செய்ய வேண்டும்?

ஆர்.சுரேஷ்குமார், உடுமலைப்பேட்டை, திருப்பூர்


உஷார்! இது ஒரு இணையவழி மோசடியாக இருக்கலாம். ஜிபே, போன்பே, நெப்ட் என்று எந்த வழியிலும் பணத்தை திருப்பி அனுப்பாதீர்கள். மோசடி நபர்கள், யாருடைய கணக்கையோ 'ஹேக்' செய்து, அந்த பணத்தை உங்கள் கணக்கிற்கு மாற்றியிருக்கலாம். பிறகு உங்களிடம் அழுது புலம்பியோ, மிரட்டியோ பணத்தை தங்களின் வேறொரு கணக்குக்கு அனுப்ப சொல்வர்.

நீங்கள் அனுப்பிவிட்டால், சைபர் கிரைம் காவல்துறை 'ஹேக்' செய்யப்பட்ட கணக்கை விசாரிக்கும் போது, பணம் உங்கள் கணக்கிற்கு வந்திருப்பதால், உங்களைத்தான் முதல் குற்றவாளியாக சந்தேகிப்பர்; உங்கள் வங்கி கணக்கும் முடக்கப்படும்.

வந்த பணத்தை பயன்படுத்த வேண்டாம். உங்கள் கணக்கிலேயே இருக்கட்டும். அந்த நபர் மீண்டும் தொடர்பு கொண்டால் ஒரு விஷயத்தை சொல்லுங்கள். அவரது வங்கிக்கு போய், தப்பான கணக்குக்கு பணம் அனுப்பி விட்டேன், பெற்று தரவும் என்று எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க சொல்லுங்கள்.

அந்த வங்கி, உங்களுடைய வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு, பணத்தை உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ள உங்களுடைய அனுமதியை கேட்கும்.

இதற்குள் உங்கள் வங்கி கிளைக்கு போய் விவரம் சொல்லி, சம்பந்தப்பட்ட வங்கி கிளையில் இருந்து ஏதேனும் கோரிக்கை வருமானால், அப்போது என் கணக்கில் இருந்து பணத்தை கழித்துக்கொள்ள எனக்கு சம்மதமே என்று எழுதி கொடுத்துவிட்டு வாருங்கள்.

அந்த நபர் உண்மையாகவே பணத்தை தவறான நபருக்கு மாற்றியிருக்கலாம். ஆனால், எல்லாரையும் நம்ப வேண்டாம். ஜாக்கிரதையாக இருப்பதில் தவறில்லையே!

நான் அரசு பள்ளியில் பணியாற்றி, 2022ல் ஓய்வு பெற்ற பின்னர், வருமான வரிப்படிவம் சமர்ப்பிப்பதை நிறுத்தி விட்டேன். தற்போது என் ஆண்டு வருமானம் தபால் அலுவலக சேமிப்பு வட்டியாக ரூபாய் 2.50 லட்சத்திற்குள் உள்ளது. இது வருங்காலத்தில் உயர்ந்தால் நான் ஐ.டி., படிவம் சமர்ப்பிக்க வேண்டுமா? நான்கு ஆண்டுகளாக செய்யாததை மீண்டும் தொடங்க முடியுமா? இடைப்பட்ட காலத்திற்கும் சேர்த்து படிவம் சமர்ப்பிக்க வேண்டுமா?

டி.அனுசுயா, மின்னஞ்சல்


வருமான வரி விதிகளின்படி, 60 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு அடிப்படை வரிவிலக்கு வரம்பு 3 லட்சம் ரூபாய் ஆகும். கடந்த ஆண்டுகளில் உங்களின் மொத்த வருமானம் 2.5 லட்சமாக மட்டுமே இருந்ததால், நீங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய சட்டப்பூர்வமான அவசியமே இல்லை. எனவே, கடந்த காலத்துக்காக இப்போது கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

உங்களின் தபால் அலுவலக வட்டி வருமானம் அல்லது வேறு ஏதேனும் வருமானம் சேர்ந்து, ஒரு நிதியாண்டில் உங்களின் மொத்த வருமானம் ரூபாய் 3 லட்சத்தை தாண்டினால், அப்போது நீங்கள் மீண்டும் ஐ.டி., தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

எனது 2021ம் ஆண்டு டிவிடெண்டு வங்கி காசோலைகளை உறவினர் ஒருவர் வாங்கி, 2025ல் என்னிடம் ஒப்படைத்தார். நான் வங்கிக்கு செலுத்தியபோது வங்கி மேலாளர் மற்றும் பர்ஸ்ட் கிளாஸ் மாஜிஸ்திரேட்டும் சான்றளிக்க வேண்டும் எனக்கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். வங்கி கேட்டுக்கொண்டபடி வங்கி மேலாளரிடமும் கெஸட்டட் அதிகாரியிடமும் சான்று பெற்று அனுப்பிய பின்னரும், இதுவரை எந்த தகவலும் இல்லை. மின்னஞ்சலில் நினைவூட்டியும் பலன் ஒன்றும் இல்லை. வழிகாட்டவும்?

இ.லட்சுமிநாராயண பெருமாள், வாட்ஸாப்


ஏழு ஆண்டுகள் ஆகவில்லை என்பதால் உங்கள் ஈவுத்தொகை பணம், முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்துக்கு அனுப்பப்பட்டிருக்காது. அது காசோலை கொடுத்த நிறுவனத்திடமே தான் இருக்கும்.

நிறுவனத்தின் பதிவாளர் கேட்டது 'முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்' சான்றிதழ். ஆனால், நீங்கள் அனுப்பியது 'கெஸட்டட் அதிகாரி' சான்றிதழ். சட்டத்தின் பார்வையில், கெஸட்டட் அதிகாரி என்பவர் நிர்வாக ரீதியான அதிகாரி. ஆனால், மாஜிஸ்திரேட் என்பவர் நீதித்துறை அதிகாரி.

நிதி மோசடிகளைத் தடுப்பதற்காக நிறுவனத்தின் பதிவுத் துறை சட்ட ஆவணங்களை மிகக் கடுமையாகச் சரிபார்க்கும். வேறு அதிகாரி கையெழுத்திட்டதை அவர்களின் சிஸ்டம் ஏற்காமல், உங்கள் கோரிக்கையை நிறுத்தி வைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

நீங்கள் சாதாரணமாக அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு நிறுவன பதிவுத் துறை பெரும்பாலும் முறையாக பதிலளிப்பதில்லை. எனவே, நீங்கள் உடனடியாக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியின் அதிகாரப்பூர்வ இணையதளமான 'செபி ஸ்கோர்ஸ்'ல் (https: scores.sebi.gov.in) ஒரு புகாரை பதிவு செய்யுங்கள்.

இதில் புகார் அளித்தால், அடுத்த 21 நாட்களுக்குள் அந்த நிறுவனத்தின் பதிவுத்துறை உங்களுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் சொல்லியே ஆக வேண்டும். இது செபியின் கடுமையான விதி.

கூடவே நிறுவன பதிவுத்துறையை மட்டும் நம்பியிருக்காமல், நேரடியாக அந்தப் பங்கு நிறுவனத்தின் 'கம்பெனி செக்ரட்டரி'க்கு உங்களின் முந்தைய மின்னஞ்சல்களை ஆதாரமாக வைத்து ஒரு புகாரை அனுப்புங்கள். நிறுவனத்தின் தலையீடு இருந்தால் நிறுவன பதிவுத்துறை உடனடியாக செயல்படும்.

ஒரு வேளை செபி புகாருக்கு பிறகு, 'மாஜிஸ்திரேட் கையெழுத்துதான் கண்டிப்பாக வேண்டும்' என்று அவர்கள் மீண்டும் கூறினால், நீங்கள் அலைய வேண்டாம்.

மாஜிஸ்திரேட்டுக்கு இணையான அதிகாரம் பெற்ற ஒரு 'நோட்டரி பப்ளிக்' வழக்கறிஞரிடம் சென்று, முத்திரைத்தாளில் சான்றொப்பம் பெற்று அனுப்புங்கள். அது போதும்.


வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.


ஆயிரம் சந்தேகங்கள்


தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.


ஆர்.வெங்கடேஷ்


pattamvenkatesh@gmail.com

ph: 98410 53881

Advertisement