பஞ்சு உற்பத்தி 291 லட்சம் பேல்கள் உள்நாட்டு தேவை 328 லட்சம் பேல்கள் மத்திய ஜவுளித்துறை கணிப்பு

திருப்பூர்: நடப்பாண்டின் பருத்தி பஞ்சு உற்பத்தி 291 லட்சம் பேல்களாகவும், உள்நாட்டு தேவை 328 லட்சம் பேல்களாகவும் இருக்கும் என மத்திய ஜவுளித்துறை ஆணையரகம் கணித்துள்ளது.

இது குறித்து ஜவுளித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2023 - 24ம் பருத்தி ஆண்டில், 325 லட்சம் பேல்களும் (ஒரு பேல் 170 கிலோ) 2024 - 25ம் ஆண்டில், 297 லட்சம் பேல்களாகவும் பஞ்சு உற்பத்தி இருந்தது. நடப்பு ஆண்டுக்கான திருத்திய இருப்பு நிலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Latest Tamil News
இதன்படி பஞ்சு உற்பத்தி 291 லட்சம் பேல்கள், இறக்குமதி 47 லட்சம் பேல்கள், கையிருப்பு என மொத்த பஞ்சு வரத்து 383 லட்சம் பேல்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதில் நுாற்பாலைகளுக்கு 217 லட்சம் பேல்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 95 லட்சம் பேல்கள், ஜவுளி அல்லாத தேவைகளுக்கு 16 லட்சம் பேல்கள் என உள்நாட்டு தேவை, 328 லட்சம் பேல்களாக இருக்கும். ஏற்றுமதிக்கு 12 லட்சம் பேல்கள் அனுமதிக்கப்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளன.

பருத்தி பஞ்சு உற்பத்தி 2023-24 325 லட்சம் பேல்கள் 2024-25 297 லட்சம் பேல்கள் 2025-26 291 லட்சம் பேல்கள் (கணிப்பு)

@block_P@விலை சவாலாக உள்ளது

தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''பஞ்சு உற்பத்தி, கடந்த ஆண்டை காட்டிலும் 6 லட்சம் பேல்கள் வரை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தி சீராகும் நேரத்தில், பஞ்சு விலை திடீரென உயர்ந்து வருவது சவாலாக மாறியுள்ளது. பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த பஞ்சு இறக்குமதி வரி 11 சதவீதத்தை தற்காலிகமாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்,'' என்றார். block_P

Advertisement