'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் கோர்ட்டில் ஆஜரானார் கெஜ்ரிவால்

புதுடில்லி,
டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானார், அப்போது அவர், பெண் நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மாவை, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலக்கக் கோரிய மனுவை, பதிவு செய்ய வலியுறுத்தினார்.

ஆனால், அதை மறுத்த அந்த பெண் நீதிபதி, இந்த வழக்கின் முடிவு வரும் வரை, வழக்கை விசாரிக்கப் போவதில்லை என அறிவித்தார்.

டில்லி மாநிலத்தின் மதுபான கொள்கை வழக்கிலிருந்து, டில்லி விசாரணை நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 27ல், குற்றம்சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை விடுவித்து உத்தரவிட்டது.

அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சரியாக விசாரிக்கவில்லை என, விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அமைப்பு மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது.

அந்த வழக்கை, பெண் நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா விசாரிக்க பட்டியலிடப்பட்டது.

ஆனால், முந்தைய வழக்கில் தன்னை குற்றவாளி என கூறிய நீதிபதி ஸ்வர்ணா, இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என கெஜ்ரிவால் வாதிட்டார். அதையடுத்து, இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் விரைவில் தன் முடிவை அறிவிக்க உள்ளது.

நேற்று முன்தினம் இந்த வழக்கில் நேரில் ஆஜரான கெஜ்ரிவால், நேற்று, வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜரானார். அப்போதும் தன் முடிவில் உறுதியாக இருந்த கெஜ்ரிவால், இந்த வழக்கை பதிவு செய்யுமாறு, நீதிபதி ஸ்வர்ணாவை கேட்டுக் கொண்டார்.

ஆனால், அதற்கு உடன்படாத நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கின் முடிவு தெரியும் வரை, இந்த வழக்கை தொடப் போவதில்லை என கூறி, ஒத்திவைத்தார்.

அப்போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''நீதிபதி மீது தவறான புகார் கூறியுள்ள கெஜ்ரிவால் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்யுங்கள்,'' என்றார்.

எனினும், இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை என நீதிபதி கூறினார்.

முன்னதாக, நேற்று முன்தினம் இந்த கோர்ட்டில் நேரில் ஆஜரான கெஜ்ரிவால், 'சர்ச்சைக்குரிய நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மாவின் வாரிசுகள், மத்திய அரசின் வழக்கறிஞரிடம் பணியாற்றுகின்றனர். அதனால், எனக்கு இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது' என்றார்.

Advertisement