ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு: தவெக வேட்பாளர்களிடம் ஓரவஞ்சனை காட்டுகிறாரா விஜய்?

30

நமது சிறப்பு நிருபர்




தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நெருங்க நெருங்க, தலைவர்களின் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. எந்த தொகுதியும் விடுபட்டு விடக்கூடாது என பார்த்து பார்த்து பிரசார உத்திகளை வகுக்கின்றனர். ஆனால் முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் விஜய், தனது கட்சியின் முக்கிய தலைவர்களின் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி பிரசாரம் செய்கிறார். மற்ற வேட்பாளர்களை எல்லாம் ‛‛அம்போ'' என விட்டுவிட்டார்.

ஏற்கனவே, திடீர் திடீரென பிரசாரத்தை ரத்து செய்துவிடுகிறார் என விஜய் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. போலீஸ் அனுமதி கிடைக்காவிட்டால், ‛‛அனுமதி கிடைக்கவில்லை. அதனால் பிரசாரம் செய்யவில்லை'' என கூப்பாடு போடும் விஜய், அனுமதி கிடைத்தால் அதை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பி விடுகிறார்'' என்று அவரது கட்சியினரே புலம்புகின்றனர்.



‛6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது' என்கிற வடிவேலுவின் காமெடி பாணியில் 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய மறுக்கிறார். வெளி மாவட்டங்களில் பிரசாரம் செய்தால் கூட 6 மணிக்கு மேல் அந்த ஊரில் தங்காமல் தனி விமானத்தில் பனையூருக்கு வந்து விடுகிறார்.


தமிழகத்தில் சென்னை, காரைக்குடி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, கோவை வழியே திருப்பூர் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும், புதுச்சேரியில் ஒருநாளும் என இதுவரை 6 நாட்கள் ரோடு ஷோ மற்றும் பிரசாரங்களில் விஜய் ஈடுபட்டுள்ளார். இவற்றில் தனக்கான பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் 2 நாட்கள், புதுச்சேரியில் 1 நாள் போக மீதமுள்ள 3 நாட்கள் மட்டுமே மற்ற வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்துள்ளார். அதிலும் அவர் பிரசாரம் செய்த வேட்பாளர்கள் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள்.
* பெரம்பூர் - விஜய் (கட்சி தலைவர்), மார்ச் 30

* கொளத்தூர் -விஎஸ் பாபு (கட்சி அட்மின்), மார்ச் 30

* வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா (தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர்), மார்ச் 30 (ரத்து)

* திருச்சி கிழக்கு - விஜய் (கட்சி தலைவர்), ஏப்., 2

* காரைக்குடி - டிகே பிரபு (மாவட்ட செயலாளர்), ஏப்., 10

* கன்னியாகுமரி - மாதவன் (மாவட்ட செயலாளர்), ஏப்., 12

* தூத்துக்குடி - ஸ்ரீநாத் (விஜயின் நண்பர், கட்சி அட்மின்), ஏப்., 12

* திருப்பூர் தெற்கு - பாலமுருகன் (மாவட்ட செயலாளர்) ஏப்.14

* எழும்புர் - ராஜ்மோகன் (துணைப் பொதுச் செயலாளர்), ஏப்., 15

* ஆயிரம் விளக்கு - ஜேசிடி பிரபாகர் (கட்சி அட்மின்), ஏப்., 15

* தி.நகர் - புஸ்ஸி ஆனந்த் (பொதுச் செயலாளர்), ஏப்., 15.

ஆக, இவர்கள் எல்லோருமே கட்சி பொறுப்பில் இருப்பவர்கள். மற்ற தொகுதிகளில் உள்ள சாதாரண பின்னணி உள்ள வேட்பாளர்கள், ‛‛நாங்கள் என்ன பாவம் செய்தோம். எங்கள் தொகுதிக்கு விஜய் எப்போ வருவார்'' என கட்சி அலுவலகத்திற்கு போனை போட்டு கேட்டபடி காத்திருக்கின்றனர். என்ன நடக்குமோ தெரியவில்லை.

Advertisement