டில்லி, பஞ்சாபில் அதிரடி: கஞ்சா, ஹெராயின் பறிமுதல்
புதுடில்லி: சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த, மூன்று பேர் டில்லியில் கைது செய்யப்பட்டு, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா மற்றும் நான்கு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, பஞ்சாபில் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 64 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் குறித்து, மாநகரப் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குற்றப்பிரிவு தனிப்படையினர், மவுலானா ஆசாத் கல்லூரி அருகே, 14ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு ரகசியமாக கண்காணித்தனர்.
ஒரு பைக்கில் வந்த இருவரும், ஸ்கூட்டரில் வந்த ஒருவரும் பொட்டலங்களை பரிமாறிய போது, போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடன் இருந்து, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ உயர் ரக கஞ்சா, இரண்டு வாகனங்கள் மற்றும் நான்கு லட்சம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பைசான் ரிஸ்வி,24, ரியாசுதீன்,44, மற்றும் நதீம் பேக், 42, ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்தில் இருந்து கஞ்சா இறக்குமதி செய்ததையும், பாங்காக்கில் வசிக்கும் முசாபர் நகரைச் சேர்ந்தவரால் நடத்தப்படும் கடத்தல் கும்பலில் வேலை செய்வதாகவும் மூவரும் வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மூவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹெராயின் பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:
மாநிலம் முழுதும் போதைப்பொருளை ஒழிக்க 'யுத் நாஷியான் விருத்' - என்ற போதைப்பொருளுக்கு எதிரான போர் நடத்தப்படுகிறது. பஞ்சாப் முழுதும் அதிரடி சோதனைகள் நடத்தப்படுகின்றன. மாநில உளவுப்பிரிவு, சிறப்பு நடவடிக்கை பிரிவு ஆகியவை இணைந்து அமிர்தசரஸில் நடத்திய அதிரடி சோதனையில், அமிர்தசரஸை சேர்ந்த சர்வன் சிங் என்ற குஜ்ஜார் மற்றும் ஷம்ஷேர் சிங் என்ற ஷேரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். போர்ச்சுகலை சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ள இருவரிடம் இருந்தும், 64.62 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சென்னையில் கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்
-
போன் போட்டா வந்து சேருது பணம்!
-
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு
-
தி.மு.க. ரூ.2,500; அ.தி.மு.க. ரூ.1,500: ஒரு ஓட்டுக்கு விலை
-
திருப்பூர் சாசனம் - 2026.. வாக்குறுதி அல்ல... வளர்ச்சியே இலக்கு
-
சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா