தி.மு.க. ரூ.2,500; அ.தி.மு.க. ரூ.1,500: ஒரு ஓட்டுக்கு விலை

1

''அடுத்தடுத்து விஜய், பழனிசாமி, ஸ்டாலின்னு, நம்ம மாவட்டத்துல தேர்தல் பிரசாரம் களைகட்டீருச்சு இல்ல?''

சித்ரா சொல்லவும் தலையசைத்தாள் மித்ரா.

''பெருமாநல்லுார்ல விஜய்க்குக் கூடுன கூட்டத்தப் பார்த்து, தி.மு.க. - அ.தி.மு.க.காரங்களுக்கு கிலியாயிருச்சுன்றாங்க.

''விஜய் கட்சிக்காரங்க பிரசாரம் சொல்லிக்கிற மாதிரி இல்லன்னாலும் விஜய் முகம், 'விசில்' சின்னம் போதும்னு நினைக்கிறாங்க.

''போலீசுக்கு வார விடுமுறைன்னு விஜய் அறிவிச்சதும், வெயில்ல பாதுகாப்புப் பணியில இருந்த போலீஸ்காரங்க முகத்துல சந்தோஷம் ததும்புச்சாம்.

''ஆனா, வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்தல... பேரை 'ஞாபகம்' வச்சு சொல்லணுமே... எதுக்கு அந்த 'ரிஸ்க்'ன்னு விஜய் நினைச்சுட்டார் போல...''

சிரித்தாள் மித்ரா.

கேஷூவலாக பழனிசாமி ''அக்கா... பல்லடத்துக்குப் பழனிசாமி வந்தார்க்கா... கேஷூவலா அவரு பேசுறதை மக்கள் ரசிக்கிறாங்க... மே 4-க்கு மேல ஸ்டாலின் கருப்புச் சட்டையே போட்டுக்கலாம்ன்னு கிண்டலடிச்சாரு.

''அ.தி.மு.க. கோட்டையாக்கணும்ன்னு அன்பு கட்டளையிட்டிருக்காராம். ஆனா, கூட்டத்துல தாமரைக்கட்சிக்காரங்க பலரும் வரலையாம்.

''அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்களை மதிக்கிறதில்லைன்னு அவங்களுக்கு வருத்தமாம். அதேபோல த.மா.கா. காரங்களும் மொத்தமா அவாய்ட் பண்ணிட்டாங்களாம்.''

''மித்து... இது எல்லா கட்சிலயும் இருக்கிறதுதான். எல்லாரையும் திருப்திப்படுத்துறது இந்தக் காலத்துல முடியாது...''

சித்ரா யதார்த்தத்தைச் சொன்னாள்.

ஸ்டாலின் 'டிஸ்கஷன்' ''மித்து... சி.எம். ஸ்டாலின் நைட்டே வந்துட்டு, காலைல பனியன் கம்பெனியில சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தாரு. ஒவ்வொரு ஊர்லயும் வித்தியாசமா மக்களைச் சந்திச்சு மீடியால போகஸ் ஆகிடுறாரு.''

''ஆமாக்கா... அவிநாசி 'சீட்' கிடைக்காத வருத்தத்துல இருந்த அந்தியூர் செல்வராஜை ஸ்டாலின் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணினாராம்.

''பொதுக்கூட்டத்துல அமைச்சர் சக்கரபாணி, செந்தில்பாலாஜிகிட்ட தன்னோட நோட்ைஸ காட்டிச் சரிபார்த்துக்கிட்டார்.''

''மித்து... அவிநாசியில திடீர்னு வேட்பாளர் கோகிலாமணிக்காக ஸ்டாலின் 'ரோடு ஷோ' நடத்தி ஆச்சரியப்பட வச்சிட்டாரே!''

''ஆமாக்கா... அங்க களம் காண்றது மத்திய அமைச்சர் முருகன் ஆச்சே! சரிக்கா... ஸ்டாலின், பழனிசாமி, விஜய்... மூணு பேரு பிரசாரத்துல எது எடுபட்டுச்சுன்னு நினைக்கிற?''

''மித்து... தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு திரட்டப்பட்ட கூட்டம்தான் ஜாஸ்தி. விஜய்க்கோ தானாவே கூடுன கூட்டம். ஆனா, விஜய் ஒன்னும் பெருசா பேசல.

''பழனிசாமியும், ஸ்டாலினும் விலாவாரியா பேசுனாங்க. மக்களோட ரியாக்ஷன் ரிசல்ட்லதான் தெரியும்.

''காங்கயத்துல துணை முதல்வர் உதயநிதியை வரவேற்கப் பூ துாவுனப்ப அவர் கண்ணுல விழுந்துருச்சு. உடனே அமைச்சர் சாமிநாதன் பதறிப்போய் பூ துாவுறதை நிறுத்தச் சொல்லிட்டாராம்''

சித்ரா விவரித்தாள்.

கடுப்பான கட்சியினர் ''அக்கா... தாராபுரத்துல அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரிச்சு அண்ணாமலை பிரசாரத்துக்கு வந்தப்ப, அ.தி.மு.க.காரங்களுக்கு பணமும், பா.ஜ.காரங்களுக்கு மதிய உணவும் தர்றதா சொன்னாங்களாம்.

''ஆனா சாப்பாடு தராததால கடுப்பாயிட்டாங்க.

''திருப்பூர் தெற்கு தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் பிரசாரத்துக்கு வந்தப்ப, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழுவினர் எதிர்ப்பைக் காட்ட குவிஞ்சாங்க.

''அப்போ நல்லுார் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், ஆளுங்கட்சி பிரமுகர்களே தோத்துப்போற மாதிரி சினிமா ஸ்டைல்ல அதிகாரம் பண்ணிப் பேசியிருக்காரு.

''இவரு போலீஸா இல்ல... கட்சிக்காரரான்னு மக்கள் கேக்குறாங்க.

''திருப்பூர் வடக்குல 'தோழர்' கட்சி வேட்பாளர் நிலைமையோ மோசம்.

''நிர்வாகிகளோட கைச்செலவுக்குக் கூட காசு வர்றதில்லையாம். தொண்டர்கள் சொந்தப் பணத்தைத்தான் செலவு பண்றாங்க.''

தோழருக்காக வருந்தினாள் மித்ரா.

வேட்பாளர் சமாதானம் ''அக்கா... அத்திக்கடவு திட்டம் பத்தி விஜய் பேசலன்னு விமர்சனம் வந்ததும், த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா, செங்கோட்டையனை அழைச்சுட்டுப் போய் நேர்ல சமாதானம் பேசியிருக்காரு.

''அதேபோல, வடக்கு அ.தி.மு.க வேட்பாளர் பிரசாரத்துக்கு கவுன்சிலர்கள் நல்லா செலவு பண்றாங்க... ஆரத்தி எடுக்க புதுசா எவர்சில்வர் தட்டே வாங்கிக் கொடுக்குறாங்க.

''பல்லடம் தி.மு.க வேட்பாளர் செல்வராஜ், வி.ஐ.பி.க்களைச் சந்திச்சு கட்சிக்குள்ள இழுக்குறாராம். மங்கலம் பகுதில, கும்பாபிஷேக விழாவுக்கு இப்பவே ஒரு லட்சம் ரூபாய் முன் தொகை கொடுத்து அமுக்கறாராம்.''

சித்ரா வியப்புற்றாள்.

ஓயாத பண மழை ''சரிக்கா... உங்க வீட்டுக்குப் பணம் வந்திருச்சா?''

''ஏன் மித்து... நாமதான் வாங்கறதில்லைன்னு முடிவெடுத்தோம்ல... ஓட்டை விக்கிறது கேவலம் இல்ல?

''ஆனா, மாவட்டத்துல பண மழை பொழியுது. தி.மு.க. - அ.தி.மு.க. காரங்க போட்டி போட்டு பணம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க... ஒரு வி.ஐ.பி. தொகுதில, தி.மு.க. 2500 ரூபாய் வரைக்கும் ஒரு ஓட்டுக்கு கொடுக்குறாங்க... இன்னும் கூட்டியும் கொடுக்க தயாரா இருக்கிறாங்களாம். அதேபோல, அ.தி.மு.க.ல 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரைக்கும் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க... இதனால கடைசி நேரத்துல களம் மாறலாம்ன்றாங்க...

''இன்னொன்னு தெரியுமாக்கா... கொடுக்கிற பணத்துல பாதிய கட்சிக்காரங்க சத்தமில்லாம அமுக்கிடுறாங்க''

''நெல்லுக்குப் பாயறது புல்லுக்கும் பாயத்தானே செய்யும்!''

''சரிக்கா... வியாழக்கிழமை ரெடியா இருங்க... காலைலயே ஓட்டுப்போட்டுட்டு வந்திருவோம்!''

இருவரிடமும் சிரிப்புச்சத்தம்.

Advertisement