போன் போட்டா வந்து சேருது பணம்!

கொளுத்தும் வெயில் தணிந்த சாயங்கால நேரம். மொட்டை மாடியில் நின்றபடி கீழே ஒரு அரசியல் கட்சியின் பிரசாரத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் சித்ரா. தோளில் கை விழ, திரும்பினால் மித்ரா.

''என்னப்பா... தெற்கு தொகுதி எப்படி இருக்கு...''

''அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் போட்டி கடுமையா இருக்கு. இன்டெலிஜென்ஸ் ரிப்போர்ட்டுல அ.தி.மு.க.வை விட தி.மு.க. கொஞ்சம் டல்லா இருக்கறதா சொல்லி இருக்காங்க. கடைசி நேரத்துல நடக்குற கிப்ட், பணப்பட்டுவாடாவால நெலம மாறலாம்னு சொல்றாங்க...''

''இருந்தாலும் விஜய் கட்சிக்கு விழப்போற ஓட்டு, ரெண்டு திராவிட கட்சிகளையும் பயமுறுத்திட்டு இருக்கு. ஏன்னா, முஸ்லிம்கள், கிறிஸ்டியன் ஓட்டு பிரியுமோன்னு தி.மு.க., பயப்படுது. முஸ்லிம்ல முதல் ஓட்டுப் போடுறவங்க பலரும் 'விசில்' அடிக்கறதுனால இந்த பயம் ஏற்பட்டிருக்காம்.

ஒவ்வொரு கட்சியில இருந்தும் விஜய் கட்சிக்கு 5 சதவீத ஓட்டு பிரிஞ்சி போகும்னு கணக்கு போட்டு வச்சிருக்காங்க. அப்படிப்போனா, கடைசி ரவுண்டுல கூட வெற்றி வாய்ப்பு பறி போக வாய்ப்பு இருக்கு,''

''இதே மாதிரி பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவங்க வசிக்கிற ஏரியாவுல பலரும் விசில் பக்கம் சாயுறதுனால, அ.தி.மு.க. மெரண்டு போயிருக்கு.

ரெண்டு திராவிட கட்சிக்காரங்களுக்கும் துாக்கம் போயிடுச்சு. எப்படியும் ஜெயிச்சுக் காட்டணுங்கிறதுனால, தி.மு.க.காரங்க வீடு வீடா கரன்சி குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க...''

''தொண்டாமுத்துார் நிலவரம் பத்தி ஏதாவது தகவல் இருக்கா?''

''அந்த தொகுதி தி.மு.க. கேண்டிடேட் சுத்தமா காசு செலவு பண்றது இல்லையாம். உடன் பிறப்புகள் பணம் கேட்டா, என்கிட்ட பணமில்லை. எல்லாரையும் மாதிரி நானும் சீட்டு கேட்டேன்; குடுத்துட்டாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்னு சொல்றாராம். இதனால உடன்பிறப்புகள் தொகுதி மாறி பிரசாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம். தொகுதியில தி.மு.க. கேண்டிடேட்ட ஆதரிச்சு கூட்டணி கட்சிக்காரங்களோ தி.மு.க. தலைவர்களோ யாரும் பிரசாரத்துக்கு வரல. அதிமுக கேண்டிடேட் வேலுமணிய மீறி, ஜெயிக்க மாட்டோம்னு தெரிஞ்சே கை கழுவி விட்டுட்டாங்க போல...வேட்பாளரும் விலை போயிட்டாருன்னு உடன் பிறப்புக்கள் பேசிக்கிறாங்க,''

''சூலுார்ல பணமழை கொட்டுதாமே...''

''நானும் கேள்விப்பட்டேன். கரூர் டீம் ஒவ்வொரு ஊர்லயும் ஆளை கொண்டு வந்து எறக்கியிருக்காங்க. அவங்க போன் நம்பரை உள்ளூர் உடன்பிறப்புகளுக்கு ேஷர் பண்ணிர்றாங்க. அவருக்கு போன் போட்டு இத்தனை பேருக்கு குடுக்க இவ்வளவு ரூபா வேணும்னு சொன்னா கொஞ்ச நேரத்துல பணம் வந்து சேர்ந்துருது. பணம் தீர்ந்துருச்சின்னு போன் போட்டா மறுபடியும் வந்துருதுன்னு கட்சிக்காரங்க கொண்டாட்டம் போடுறாங்க,''

''கேக்கவே ஜில்லுனு இருக்கு... தெற்குல திருவிழாவாமே?''

''சந்தேகமே வேண்டாம்...மாஜி அமைச்சர் அவரோட சொந்த ஊர், கோவைன்னு ரெண்டு மாவட்டங்கள்லயும் அந்தக் கட்சியை ஜெயிக்க வைக்க வேண்டிய கட்டாயத்துல இருக்காரு. மேற்கு மண்டலத்துல அவருக்கு 32 தொகுதிக்கு பொறுப்பு குடுத்திருக்காங்க. இது ஆயிரம் கோடி புரொஜெக்டாம்,''

''அம்மாடி...''

''அது மட்டுமில்ல... இலை கட்சி ஸ்ட்ராங்கா இருக்கற தொகுதிகள் போக மத்த தொகுதிகள்ல கரன்ஸியை கொட்டுறாராம். ஒரு ஓட்டுக்கு ஆயிரத்துல இருந்து ஆறாயிரம் வரை பட்டுவாடாவாம். பட்டியலின ஜனங்க இருக்கற ஏரியாக்கள்ல மதுரை வீரன் கோயில் ஒவ்வொன்னுக்கும் பத்தாயிரம் ரூபா குடுத்திருக்காங்களாம்,''

''ஜனநாயகம் வாழ்க,''

- பேசியபடி இருவரும் மாடியில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றனர்.

Advertisement