கேரளாவில் 'அரிஷ்டம்' அருந்திய பழங்குடியின இளைஞர் மரணம்
வயநாடு: கேரளாவில், ஆயுர்வேத மருந்தான, 'அரிஷ்டம்' அருந்திய 38 வயதான பழங்குடியின இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவில் வயநாடு மாவட்டத்தின் செறியம்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். இவர், கடந்த 7ம் தேதி தன் வீட்டில் ரத்த வாந்தி எடுத்ததால் உடனே மானந்தவாடி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.
அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். முன்னதாக இவர், அரிஷ்டம் எனப்படும் ஆயுர்வேத மருந்து உட்கொண்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இதுதவிர, அங்கு போதைப்பொருள் கலந்த மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பிரசாத் உட்கொண்ட அரிஷ்டம் மருந்தின் மாதிரிகளை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் அந்த மருந்தை விற்பனை செய்த கடை, உரிமம் இன்றியும் மருந்தாளுனர் இன்றியும் இயங்கியதால், அக்கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.
இதற்கிடையே, பிரசாத் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில், இந்த அரிஷ்டத்தை சேர்த்து குடித்திருக்கலாம் எனவும், அதனால் அவரது உடல்நிலை கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்குபின் முழு விபரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.