கள்ளிமந்தையத்தை தலைமையிடமாக கொண்டு புது தாலுகா : அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரம்;கள்ளிமந்தையத்தை தலைமையிடமாக கொண்டு புது தாலுகா, புது ஒன்றியம் உருவாக்கப்படும் என ஒட்டன்சத்திரம் தி.மு.க., வேட்பாளரான அமைச்சர் சக்கரபாணி பிரசாரம் செய்தார்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து பிரசாரம் செய்த அமைச்சர் பேசியதாவது:

ஒட்டன்சத்திரம் தொகுதியில் 60 ஆயிரத்து 254 பயனாளிகள் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். கிராமப்புற இளைஞர்கள் அரசு பணிகளில் சேர்ந்து பயன்படும் வகையில் காளாஞ்சிபட்டியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நுாற்றாண்டு போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் படித்த பல இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேர்ந்து உள்ளனர். கள்ளிமந்தையத்தை தலைமையிடமாகக் கொண்டு புது தாலுகா, புது ஒன்றியம் உருவாக்கப்படும். கள்ளிமந்தையத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அரசு கலை ,அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. ரூ.22 கோடி மதிப்பீட்டில் பழநி ஆண்டவர் மகளிர் கலை கல்லுாரிக்கு சொந்த கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. விருப்பாச்சியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலைய கல்லுாரி அமைக்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடி மதிப்பீட்டில் சத்திரப்பட்டி மடத்துக்குளம் வரை தேசிய நெடுஞ்சாலை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் ஒரு 22 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் காய்கறி மார்க்கெட் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வாகரையில் மக்காச்சோளம் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு உயர்ரக விதைகளை வழங்கிடும் ஒரு மகத்தான மையமாக திகழ்கிறது என்றார்.

Advertisement