குடும்ப தகராறில் மனைவியை கொன்ற பூ வியாபாரி தற்கொலை

செய்யாறு, செய்யாறு அருகே, குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த, பூ வியாபாரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், சிறு நகரை சேர்ந்தவர் பூ வியாபாரி கோடீஸ்வரன், 43. இவரது மனைவி சிவசங்கரி, 34. ஆற்காடு சாலையில் ரத்த பரிசோதனை நிலையம் வைத்துள்ளார். இவர்களது மகன் மனோ பாலாஜி, 16, மகள் நிவஸ்ரீ, 14. கடந்த சில நாட்களாக தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. வெளியூரில் படிக்கும் மனோ பாலாஜி, நேற்று முன்தினம்

மாலை, பள்ளி கடைசி நாள் என்பதால், தன்னை அழைத்துச் செல்ல பெற்றோரை வரச்சொல்ல போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், பெற்றோர் இருவரும் நீண்ட நேரமாகியும் போனை எடுக்கவில்லை. இதனால் உறவினர் ஒருவருக்கு, மனோ பாலாஜி போன் செய்து, 'அப்பாவும் அம்மாவும் போனை எடுக்கவில்லை. என்னவென்று பாருங்கள்' என கூறியுள்ளார். அவர் சென்று பார்த்ததில், வீட்டில் சிவசங்கரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததையும், கோடீஸ்வரன் பேனில் துாக்கில் தொங்கியபடி சடலமாகவும் கிடந்தனர். செய்யாறு போலீசார் இருவரது சடலத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில், மனைவியை, கணவன் அடித்து கொலை செய்து விட்டு, தான் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement