பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு :சகோதரர்கள் 'போக்சோ'வில் கைது
செம்மஞ்சேரி:சிறு வயதில் பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், 10 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொந்தரவு கொடுப்பதாக பெண் அளித்த புகாரில், அண்ணன், தம்பி இருவரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லுாரை சேர்ந்த 25 வயது பெண், கண்ணகி நகர் மகளிர் போலீசில், சில தினங்களுக்கு முன் ஒரு புகார் அளித்தார். அதில், 'எனக்கு 15 வயது இருக்கும்போது, டியூசன் சென்ற இடத்தில் இருந்த பிராங்கிளீன் ராஜா என்பவர், காதலிப்பதாக கூறி மிரட்டி, பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
'இதை, அவரது சகோதரர் விக்டர் லிபின் ராஜாவிடம் கூறினேன். அவர், தம்பியை அழைத்து கண்டிப்பதற்கு பதிலாக, அவரும் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
'ஒரு கட்டத்தில், அவர்களிடம் இருந்து விலகி, திருமணம் செய்து தனியாக வசிக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு பின், என்னை தவறாக பேசுவதுடன், மீண்டும் என்னை அழைக்கின்றனர். வர மறுத்தால், உன்னுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவோம் என மிரட்டுகின்றனர்' என கூறியுள்ளார்.
போலீசார் விசாரித்து, இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, நேற்று சோழிங்கநல்லுாரை சேர்ந்த விக்டர் லிபின் ராஜா, 42, பிராங்கிளீன் ராஜா, 38, ஆகியோரை கைது செய்தனர்.