தமிழக மக்கள், பெண்களுக்கு பாதுகாப்பு தருவது அ.தி.மு.க.,தான் :பென்ஜமின் பிரசாரம்
மதுரவாயல்: மதுரவாயல் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் பென்ஜமின் போட்டியிடுகிறார். நொளம்பூர், முகப்பேர், அயப்பாக்கம், அடையாளம்பட்டு, வானகரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், பிரசாரத்தில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக நடிகையும் பா.ஜ., நிர்வாகியுமான நமிதா ஓட்டு சேகரித்தார்.
பென்ஜமின் பேசியதாவது:
மக்களுக்கு, குறிப்பாக பெண்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அ.தி.மு.க., அரசு, தமிழகத்தில் அமையப்போகிறது. தமிழகத்திற்கு உண்மையான விடியல், பொதுச்செயலர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி தான்.
நான் எங்கு சென்றாலும் பெண்கள் ஆதரவு அளிக்கின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்கள் அடைந்த கஷ்டங்கள் அளவில்லாதது. பெண்களுக்கு எதிராக, 2,000க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 35,000க்கும் மேற்பட்ட 'போக்சோ' வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. விலை வாசி, வீட்டு வரி, சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை வசதிகளை மீண்டும் பூர்த்தி செய்ய, எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகை நமிதா பேசுகையில், ''புதுக்கோட்டை கிராமத்தில் குடிநீர் கூட முறையாக வழங்குவதில்லை; ஆனால், போதை தண்ணீர் நிறைய கிடைக்கிறது. 'அம்மா'வை போல் ஆட்சி செய்யும் கட்சி வேண்டுமா; 'டாஸ்மாக்' போல் செயல்படும் கட்சி வேண்டுமா என்பது உங்கள் கையில் உள்ளது,'' என்றார்.