கட்டத்தை உடைத்து முதல்வரானேன் 2வது முறையும் ஆட்சிக்கு வரப்போகிறேன்: கார்த்திக் மோகனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்
சென்னை: ''கட்டத்தை உடைத்து முதல்வரானேன்; மீண்டும் ஆட்சிக்கு வரப்பேகிறேன். பதவிக்காக இல்லை, ஒட்டுமொத்த தமிழகத்தை பாதுகாக்க வருகிறேன்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வில்லிவாக்கம் தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து, நேற்று மதியம் அயனாவரத்தில், முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
மீண்டும் தி.மு.க., ஆட்சி வரப்போகிறது என்ற உறுதியை, மக்கள் கொடுத்து வருகின்றனர். பக்கத்தில் உள்ள கொளத்துார் தொகுதியில் நான் நிற்கிறேன். எனக்கு ஒரு நம்பிக்கை என்னவென்றால், 'ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்பது. அவரும் வெல்வார்; நானும் வெல்வேன்.
உரிமைத் தொகையை வழங்க முடியாது என்றனர். ஆட்சிக்கு வந்த பின், நிதி சுமையால் அது சிரமமாக தான் இருந்தது. எல்லாவற்றையும் கடந்து உரிமைத் தொகையை வழங்கினோம்.
அதேபோல், மீண்டும் நம் ஆட்சி அமைந்ததும், உரிமை தொகை உயர்த்தி வழங்கப்படும். அதேபோல் இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும்.
கடந்த முறை நான் தேர்தலில் நின்றபோது, 'எனக்கு கட்டம் சரியில்லை, முதல்வராக முடியாது' என்றனர். அந்தக் கட்டத்தை உடைத்து ஆட்சிக்கு வந்து விட்டோம்.
தற்போது என்ன சொல்கின்றனர் என்றால், தி.மு.க., தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததில்லை என்கின்றனர். உண்மைதான், அதையும் உடைத்து, உங்கள் ஆதரவுடன் மீண்டும் ஸ்டாலின் தான் ஆட்சிக்கு வரப்போகிறான்.
பதவிக்காக ஆட்சிக்கு வரவில்லை, ஒட்டுமொத்த தமிழகத்தை பாதுகாக்கவே வருகிறேன். கார்த்திக் மோகன் துடிப்பான வேட்பாளர்; எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர்த்து வைப்பார். அவரை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து, கார்த்திக் மோகனை ஆதரித்து, அவரது தந்தை அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகன், மனைவி ஸ்ருதி மோகன், நடிகை விஜயலட்சுமி மற்றும் சகோதரிகள் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தனர்.
பின், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 150 ஆட்டோ ஓட்டுநர்கள், கார்த்திக் மோகனை நேரில் சந்தித்தனர். அவர்கள், ஆட்டோ கட்டணம் முறைப்படுத்துதல் மற்றும் தங்களுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள நலத்திட்டங்களை குறித்து தெரிவித்தனர்.
அவர்களிடம் பேசிய கார்த்திக் மோகன், ''நகரில் முதுகெலும்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் விளங்குகின்றனர். தி.மு.க., ஆட்சி அமைந்ததும், ஆட்டோ கட்டணம் நிர்ணயம், நலத்திட்டங்கள் குறித்து, அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.