மீனம்பாக்கம் - நங்கநல்லுார் இடையே 40 நிமிடம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை:மீனம்பாக்கம் - நங்கநல்லுார் இடையே, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், நேற்று, 40 நிமிடங்கள் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில், தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிகாலை 5:00 மணி முதல் இரவு 11:30 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்குவதால், பயணியர் நெரிசல் இன்றி, விரைவாகவும், 'ஏசி' வசதியுடன் சொகுசாகவும் பயணம் செய்ய முடிகிறது.

இதற்கிடையே, மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையம் இடையே, நேற்று காலை 7:15 மணி அளவில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், காலை 7:55 மணி வரை, மெட்ரோ ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, இங்கிருந்து பயணியரை இணைப்பு வாகனங்கள் வாயிலாக, அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அழைத்து சென்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மெட்ரோ ரயில் நிறுவன தொழில்நுட்ப அலுவலர்கள், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, காலை 8:00 மணிக்கு பின், மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

Advertisement