தி.மு.க. நல்லாட்சி தொடர உதயசூரியனை மறவாதீர்: வேட்பாளர் செல்வராஜ் வேண்டுகோள்

பல்லடம்:பல்லடம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மதிப்புமிக்க உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று காலை, பல்லடம் என்.ஜி.ஆர். சாலை மற்றும் செட்டிபாளையம் சாலையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் சென்ற வேட்பாளர் செல்வராஜ், அங்கு நடந்த பிரார்த்தனைக் கூட்டங்களில் பங்கேற்றுப் பாதிரியார்களிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து வார்டு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று அவர் பேசியதாவது:

தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. உங்கள் ஒவ்வொருவரின் வாக்கும் மிகவும் மதிப்பானது; எனவே அதை வீணடிக்காமல் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். அரசுப் பள்ளி குழந்தைகள், பெண்கள் மற்றும் தாய்மார்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கான நல்லாட்சி தொடர, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தாருங்கள். வாக்கு இயந்திரத்தில் முதல் பட்டனே உதயசூரியன் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



நான் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்பதற்கு முன்பே, தொகுதி மக்களின் நீண்ட காலப் போராட்டமான 'புறவழிச்சாலை' திட்டம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. அதேபோல், குடிநீர் பிரச்னை, கறிக்கோழி மற்றும் விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு தொடர்பான பிரச்னைகள் என அனைத்திற்கும் உரிய தீர்வு பெற்றுத் தரப்படும்.

தேர்தல் நாளன்று மறவாமல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அமையப் பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.



இவ்வாறு அவர் பேசினார்.

---

பல்லடத்தில் வீதி வீதியாக சென்று தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் வாக்கு சேகரித்தார்.

Advertisement