கேரளாவில் கோழிக்கறி தராததால் உறவினரை கொன்றவருக்கு வலை
பாலக்காடு: கேரளாவில் கோழிக்கறி தராததால், மது போதையில் உறவினரை கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொழிஞ்சம்பாரா பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார், 45. திருமணமாகாத இவர் தன் சகோதரியின் வீட்டில் வசித்து வந்தார். இவர், சகோதரி மகன் பிரபாகரனுடன் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தார். வீட்டில் தனியாக இருந்த இருவரும், நேற்று முன்தினம் ஒன்றாக மது அருந்தினர்.
அப்போது, தான் சமைத்த கோழிக்கறியை பிரபாகரனுக்கு தராமல் செந்தில் குமார் மட்டுமே தனியாக சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் அப்போது தகராறு ஏற்பட்டது. இதன் முடிவில், அருகில் இருந்த பைப்பை எடுத்து செந்தில் குமாரின் தலை, உடல் உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக தாக்கிய பிரபாகரன், பின் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த செந்தில் குமாரை, அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய பிரபாகரனை தேடி வருகின்றனர். அவர், தமிழகத்துக்கு தப்பியது தெரிந்ததை அடுத்து, இங்குள்ள போலீசாரின் உதவியுடயை கேரள போலீசார் நாடியுள்ளனர்.