மணிப்பூர் வன்முறை சம்பவம்: 21 பேரை கைது செய்தது போலீஸ்
இம்பால்: மணிப்பூரில், சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். 'வன்முறையை துாண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மெய்டி மற்றும் கூகி பழங்குடி இனத்தவர் இடையே மோதல் வெடித்து, இனக்கலவரமாக மாறியது. இதில், 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய - மாநில அரசுகள் எடுத்த தீவிர முயற்சியால், அங்கு தற்போது மோதல் கட்டுக்குள் உள்ளது.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி மெய்டி இனத்தவர் அதிகம் வாழும் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரங் டிரோங்லோபி பகுதியில் உள்ள வீட்டில், தீவிர வாதிகள் என சந்தேகப்படும் சிலர், வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 5 வயது சிறுவன் மற்றும் ஆறு மாத பெண் குழந்தை உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு ஆயில் டேங்கர்கள், ஒரு லாரியை தீ வைத்து எரித்தனர். மேலும் அருகேயுள்ள தற்காலிக போலீஸ் நிலையத்தையும் அவர்கள் சூறையாடினர்.
இந்நிலையில், குழந்தைகளை கொன்ற குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி, கடந்த 18ம் தேதி இம்பால் மேற்கு மாவட்டத்தின் சிங்ஜாமில் தீப்பந்த ஊர்வலம் நடைபெற்றது . அப்போது போராட்டக்காரர்களில் சிலர், தடையை மீறி முதல்வரின் வீட்டை முற்றுகையிட சென்றனர். இதை யடுத் து அவர்கள் மீது , கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பாதுகாப்பு படையினர் கலைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேரை போலீசார் கைது செய்த நிலையில், சமூக ஊடகங்களில் வன்முறையை துாண்டும் வகையில் கருத்துகளை பதிவிட்ட 23 வயது இளைஞரையும் போலீசார் கைது செய்தனர். இதுதவிர, இந்த வழக்கில் இம்பால் கிழக்கு மாவட்டதைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், மெய்டி அமைப்பின் போராளிக் குழுவான 'அரம்பாய் தெங்கோல்' அமைப்பின் உறுப்பினராக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட போலீசார், வன்முறையை துாண்டவோ அல்லது சமூக நல்லிணக்கத்தை குலைக்கவோ முயற்சிக்கும் எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
மேலும்
-
தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு :மாவட்ட ஹிந்து முன்னணி தீர்மானம்
-
வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்ல வாகனம் ஏற்பாடு செய்ய கூடாது கலெக்டர் அறிவிப்பு
-
கமிட்டியில் விலைப்பட்டியல் வெளியிட மறுப்பு; விவசாயிகள் சாலை மறியல்
-
தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும் ரிஷிவந்தியம் ஜொலிக்கும் :வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் உறுதி
-
மாவட்டத்தில் 2,687 மாற்றத்திறனாளிகள் முதியோரின் தபால் ஓட்டு பதிவு
-
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர் வி.சி., தலைவர் நன்றி கடன் செலுத்த வி.சி., வேட்பாளர் வேண்டுகோள்