'ஆபத்துகளின் வழித்தடங்களாக விரைவுச்சாலைகள் மாறக்கூடாது': புதிய வழிகாட்டுதல்களை பிறப்பித்தது சுப்ரீம் கோர்ட்

1

புதுடில்லி: 'நிர்வாக மெத்தனப் போக்கு அல்லது உட்கட்டமைப்பு இடைவெளிகளால், விரைவுச்சாலைகள் ஆபத்துகளின் வழித்தடங்களாக மாறிவிடக் கூடாது' என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், சாலை பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தானின் பலோடி மற்றும் தெலுங்கானாவின் ரங்காரெட்டியில், கடந்தாண்டு நவ., 2 மற்றும் 3ம் தேதிகளில் வெவ்வேறு சாலை விபத்துகள் ஏற்பட்டன; இதில், 34 பேர் பலியாகினர்.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஜே.கே.மஹேஸ்வரி, ஏ.எஸ்.சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சாலைகளை பாதுகாப்பாக மாற்றுவதற்கான வழிகாட்டுதல்களை அமர்வு பிறப்பித்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நம் நாட்டின் மொத்த சாலை நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் 2 சதவீதம் மட்டுமே உள்ளன. ஆனால், சாலை விபத்து தொடர்பான மரணங்களில், 30 சதவீதம் இங்கு தான் நிகழ்கின்றன.

சட்டவிரோத வாகன நிறுத்தம் அல்லது அபாயகரமான சாலைகள் போன்ற தவிர்க்கக்கூடிய ஆபத்துகளால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டால் கூட, அது பாதுகாப்பு விவகாரத்தில் அரசின் தோல்வியாகவே கருதப்படும்.

நிர்வாக மெத்தனப் போக்கு அல்லது உட்கட்டமைப்பு இடைவெளிகளால், விரைவுச்சாலைகள் ஆபத்துகளின் வழித்தடங்களாக மாறிவிடக் கூடாது. எனவே, சாலை பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவிலான இடைக்கால வழிகாட்டுதல்களை நீதிமன்றம் பிறப்பிக்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில போலீசார், மாநில போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து, 60 நாட்களுக்குள், இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட கலெக்டர்கள், வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

@block_B@ உணவகங்களை இடிக்க உத்தரவு

* உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்: எந்தவொரு தேசிய நெடுஞ்சாலையின் வழித்தட பகுதிக்குள், உணவகம், தாபா, வணிகக் கட்டடம் அமைய தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே செயல்படும் கட்டடங்கள் அடுத்த, 60 நாட்களுக்குள் இடிக்கப்பட வேண்டும்

* குறிப்பிடப்பட்ட நிறுத்துமிடம் தவிர, எந்தவொரு தேசிய நெடுஞ்சாலைப் பாதையிலும் கனரக அல்லது வர்த்தக வாகனங்கள் நிறுத்தப்படக்கூடாது

* தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில பொதுப் பணித் துறையிடம் முன் அனுமதி பெறாமல், நெடுஞ்சாலை பாதுகாப்பு மண்டலங்களுக்குள் உள்ள இடத்திற்கு, எந்தவொரு துறையோ, அதிகார அமைப்போ, உள்ளாட்சி அமைப்போ உரிமம், தடையில்லா சான்றிதழ் அல்லது வர்த்தக அனுமதி அளிக்கக் கூடாது. அது தொடர்பான உரிமங்களை புதுப்பிக்கவும் கூடாது

* தேசிய நெடுஞ்சாலை செல்லும் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட நெடுஞ்சாலை பாதுகாப்பு பணிக்குழுவை, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் கலெக்டர் அமைக்க வேண்டும். கண்காணிப்பு, ரோந்து, சாலையோர வசதிகளை உள்ளடக்கிய மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, தேசிய நெடுஞ்சாலையில் செயல்படுத்தப்பட வேண்டும்

* இந்த உத்தரவு பதிவேற்றப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களுக்குள், இது தொடர்பான தரவுகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து பெற்று, இணக்க அறிக்கையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தாக்கல் செய்ய வேண்டும்.block_B

Advertisement