வாகனங்களுக்கு சுற்றுச்சூழல் கட்டணம் அதிகரிக்க டில்லி மாநகராட்சி முடிவு

புதுடில்லி:டில்லியில் நுழையும் வர்த்தக வாகனங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் கட்டணம், உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

டில்லியில் மோசமான காற்றால், சீதோஷ்ண நிலை மோசமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த, மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, டில்லியில் நுழையும் வர்த்தக வாகனங்களுக்கு, சுற்றுச்சூழல் கட்டணம் விதிக்கப்படுகிறது.

இந்த கட்டணத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரி, உச்ச நீதிமன்றத்தில் எம்.சி.மேத்தா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், கட்டணத்தை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

அதன் படி, விரைவில், டில்லியில் நுழையும் வாகனங்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது என எம்.சி.டி., நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய கட்டணம் படி, டில்லியில் நுழையும் வர்த்தக வாகனங்களுக்கு, 'கேட்டகரி' 2 வாகனங்களுக்கு, அதாவது இலகு ரக வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணம், 1,400 ரூபாயிலிருந்து, 2,0000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களுக்கு தான் மிகவும் அதிகமாக சுற்றுச்சூழல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆக்சில் மற்றும் அதற்கு அதிகமான வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும், 2,600 ரூபாய், 4,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கணக்கு படி, டில்லிக்குள், தினமும், 4,000த்திற்கும் அதிகமான இலகு ரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும் வாகனங்களுக்கு, சுற்றுச்சூழல் இழப்பீடு கட்டணம் என்ற பெயரில், அதிகபட்சம், 4,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட உள்ளன.

இந்த கூடுதல் கட்டண வசூல், விரைவில் செயல்படுத்தப்படும் என எம்.சி.டி., நேற்று அறிவித்துள்ளது.

Advertisement