ரூ.1,212 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

சென்னை: 'தமிழகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் சோதனையில், 1,212 கோடி ரூபாய் மதிப்பிலான, பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும், 136 பொது பார்வையாளர்கள், 40 காவல்துறை பார்வையாளர்கள், 150 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில், 83,875 போலீசார், 40,427 காவல்துறை அல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய ஆயுத பாதுகாப்பு படையிலிருந்து, 300 கம்பெனி வீரர்கள் வந்துள்ளனர்.

அனைத்து தொகுதிகளிலும் கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். கண்காணிப்பு குழுக்கள் வாயிலாக, இதுவரை, 169 கோடி ரூபாய் ரொக்கம், 2.95 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள், 82.7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 650 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்டவையும், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்ட, 306 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இவற்றின் மொத்த மதிப்பு, 1,212 கோடி ரூபாய். இவற்றில் 495 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், உரிய ஆவணங்களை வழங்கியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement