சுந்தர்.சி.,க்கு எதிரான மனு 'டிஸ்மிஸ்'

சென்னை: வேட்பு மனுவில், வருமானங்கள் குறித்த தகவல்களை மறைத்ததாக, மதுரை மத்திய தொகுதி அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளரும், திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி.,க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மத்திய தொகுதி வாக்காளர் ஷகிலா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

அ.தி.மு.க., கூட்டணியில், புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர்.சி., தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவர் இயக்குனராகவும், பங்குதாரராகவும் உள்ள, 'அவ்னி டெலி மீடியா, அவ்னி மூவீஸ், அவ்னி சினி மேக்ஸ்' போன்ற நிறுவனங்கள் குறித்த விபரங்களை மறைத்து உள்ளார்.

இந்த நிறுவனங்கள் வாயிலாக கோடிக் கணக்கில் வருவாய் பெற்றும், அதன் விபரங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. இது குறித்து, வருமானவரித்துறை மற்றும் தேர்தல் கமிஷன் விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் கமிஷன் தரப்பில், 'வருவாய் ஆதாரங்கள், நிதி விபரங்கள், பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோர முடியாது. இந்த மனு நிலைக்க தக்கது அல்ல' என, தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, மனுதாரர், வருமான வரித்துறையை அணுக அறிவுறுத்தினர்.

Advertisement