திமுகவுக்கு எதிராக மக்கள் கோபம் வெளிப்பட துவங்கி இருக்கிறது; அண்ணாமலை

24


மயிலாப்பூர்: திமுக வீழ்த்தப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். திமுகவுக்கு எதிராக மக்கள் கோபம் வெளிப்பட துவங்கி இருக்கிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது
: இன்றைக்கு மிக தெளிவாக எல்லோரும் வெற்றி பெற போகிறோம். மே4க்கு பிறகு இபிஎஸ் முதல்வராக பதவியேற்பார். தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை காண்கிறேன். தேஜ கூட்டணிக்கு ஆதரவாக ஒரு பெரிய அலை உருவாகி இருக்கிறது. தென் தமிழகம், கொங்கு மற்றும் டெல்டா பகுதிகளில் திமுகவுக்கு எதிராக கோபம் முழுமையாக களத்தில் வெளிப்பட ஆரம்பித்து இருக்கிறது.



பார்லியில் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்த காரணத்தினால், பெண்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக ஓட்டளிக்க போகிறார்கள். களம் சிறப்பாக இருக்கிறது, திமுக வீழ்த்தப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். 23ம் தேதி நீங்கள் பார்ப்பீர்கள். தேஜ கூட்டணி வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள். ராகுல் உட்பட யாரும் பாஜ உள்ளே வரக்கூடாது என்று பிரசாரம் செய்கிறார்கள், முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என்று யாரும் பிரசாரம் செய்யவில்லை.


ராகுலும், ஸ்டாலினும் ஒரே மேடை ஏறவில்லை. தனித்தனியாக நின்று கொண்டிருக்கின்றனர். போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டும். கோவில் வாசலில் தேங்காய் உடைத்தால் எப்படி சிதறுமோ, அதேபோல் திமுக கூட்டணி சிதறி இருக்கிறது. 169 இடங்களில் நிற்கும் அதிமுக எப்படி பாஜவின் பினாமியாகும். தேவையில்லாமல் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு தெளிவாக தெரியும். திமுகவுக்கு எதிரான ஓட்டை ஏப்ரல் 23ம் தேதி மக்கள் செலுத்த இருக்கிறார்கள். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

நிருபர்களுக்கு பேட்டி




முன்னதாக, தஞ்சையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: விஜய் இதுவரைக்கும் கொடுத்து இருக்கும் வாக்குறுதிகள் குறித்து பல இடங்களில் பேசி இருக்கிறார். அதனை ஒருவர் கணக்கு போட்டு சொல்லி இருந்தார். 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று ஒருவர் சொல்லி இருந்தார்.


தமிழகத்தின் பட்ஜெட்டே 4.50 லட்சம் கோடி தான். தமிழக வெற்றிக்கழகம் கொடுத்து இருக்கும் வாக்குறுதிகள் செலவு பட்ஜெட்டை தாண்டி இருக்கிறது. இதனை மக்கள் மன்றத்தில் வைக்கிறேன். மக்கள் இதையெல்லாம் பார்த்து முடிவு எடுக்கட்டும். எல்லா அரசியல் கட்சிகளுமே வாக்குறுதிகள் கொடுத்து இருக்கிறார்கள்.


இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் எது சரியான வாக்குறுதிகள், சரியில்லாத வாக்குறுதிகள் தரம்பிரிக்க பார்க்கிறார்கள். இலவசங்கள் என்ன, மக்களுக்கு அடிப்படையாக செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் என்ன என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.


அதுக்குள்ள போக விரும்பவில்லை. மக்கள் இன்றைக்கு எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். மக்கள் ஓட்டு செலுத்தும் போது, சில வாக்குறுதிகளால் கடன் அதிகரித்தால் என்னவாகும் என்று யோசித்து பாருங்கள். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
தினமலர் நேரலை

மயிலாப்பூரில் தமிழிசைக்கு ஆதரவாக அண்ணாமலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

லைவ் வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்

Advertisement