நான்கு தொகுதிகளிலும் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா தடுக்கப்படுமா: வேட்பாளர்களின் இறுதி பிரசாரம் இன்று ஓயும் நிலையில்

ராமநாதபுரம் : தமிழகத்தில் ஏப்.,23ல் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 21 ஆம் தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில் சில கட்சியினர் மறைமுகமாக வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் வழங்கி வருகின்றனர். இதனை மத்திய தேர்தல் பார்வையாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும் படை, நிலைத்த கண்காணிப்பு குழுவினர் என 72 குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட எல்லைகள், தேர்தல் பிரசார பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் பரமக்குடி(தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்துார் ஆகிய தொகுதிகளில் பா.ஜ., அ.தி.மு.க., தி.மு.க., காங்., த.வெ.க., நா.த.க., உள்ளிட்ட கட்சியினர், சுயேச்சைகள் என 66 வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நாளை மறுநாள் (ஏப்.,23) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டு சில கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூ.1000 வரை பணப்பட்டுவாடா வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இரவு 10:00 மணிக்கு மேல், அதிகாலை 4:00மணி, மதியம் 1:00மணி என ஆட்கள் நடமாட்டம் குறைந்த நேரங்களில் நகர், கிராமங்களில் குறிப்பிட்ட தெருக்களை தேர்வு செய்து வெளியூர் நபர்கள் மேற்பார்வையில் உள்ளூர் நிர்வாகிகள் உதவியுடன் பணப்பட்டுவாடாவை துவங்கியுள்ளனர்.

கிராமங்களில் மின்தடையை ஏற்படுத்தி பணம் வழங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான புகாரில் தேர்தல் அதிகாரிகள் திருவாடானை, பரமக்குடி தொகுதியில் சிலரை பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் இன்று (ஏப்.,21) மாலை 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. நாளை மறுநாள் ஏப்.,23 வரை ஓட்டுக்கு பணப்பட்டுவாடா அதிகளவில் வழங்க வாய்ப்புள்ளது.

எனவே பணப்பட்டுவாடாவை தடுக்க நகர், கிராமங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் வாகன சோதனையை அதிகரிக்க மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாங்குவது சட்டப்படி குற்றம். பணப்பட்டுவாடாவை தடுக்க சோதனைச்சாவடிகளில் அரசு பஸ்கள், பால் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டூவீலர்கள், கார்களை நிறுத்தி நிலைத்த கண்காணிப்பு குழுவினர் சோதனையிடுகின்றனர். பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 1950, 1800 425 7092 தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றனர்.

------------

Advertisement