கிராவல் மண் திருட்டு: இருவர் மீது வழக்கு 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கிராவல் மண் திருடிய இருவர் மீது வழக்கு பதிந்து, டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஆலத்துார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டி.என்.46.எம்.9546 பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு, அதிலிருந்த இருவர் தப்பி ஓடினர்.

தொடர்ந்து டிப்பர் லாரியை சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி 2 யூனிட் கிராவல் மண் திருடி சென்றது தெரிந்தது. இதையடுத்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய மோ.வன்னஞ்சூரை சேர்ந்த ஆசைதம்பி மகன் சுபாஷ், அணைகரைக்கோட்டாலத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆகாஷ் ஆகிய இருவர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement