தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

திருப்பூர்: சட்டசபை தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்ற, நுாறு சதவீதம் ஓட்டளிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம் தேர்ந்தெடுப்போம் என்று, ஹிந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஜனநாயகத்தின் திருவிழாவான, இந்த தேர்தலில் அடுத்த, ஐந்தாண்டுகளுக்கான, நமது மாநில ஆளுமையை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பதை மனதில் கொண்டு, நாம் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். கடந்த காலங்களில் நமக்கு கிடைத்த படிப்பினையை கவனத்தில் கொண்டு, வருங்கால ஆட்சியை, நாம் தேர்ந்தெடுக்க ஜனநாயகம் தந்திருக்கும் ஓட்டுரிமை எனும், ஆயுதத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.

ஜனநாயகத்தின் தாயகம், நம் தமிழ்நாடு. பல நுாறு ஆண்டுகளுக்கு, முன்பே மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறை, தமிழகத்தில் பின்பற்றப்பட்டது. அதற்கு சான்றாக செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூர் கோவில் கல்வெட்டு ஆதாரமாக உள்ளது. குடவோலை முறை பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அதில், வேட்பாளருக்கான தகுதி, மிகத் துல்லியமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை காணும் போது, நவீன உலகில் வாழும், நாம் ஏன் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது. நமக்கு அளித்த ஓட்டுரிமையை நாம் பொறுப்புணர்வுடன் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். இந்த தேர்தலில் நல்ல ஆளுமை இல்லாத நபர்களை தேர்வு செய்தால், அடுத்த, ஐந்தாண்டுகளில் நாம் அனுபவிக்க போவது வேதனையான விஷயம்.

கடந்த, ஐந்தாண்டுகளில், தி.மு.க. எனும் தீய சக்தி தேசத்தை அவமதிக்க துடித்தது. ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை சிதைக்க செயல்பட்டது. ஹிந்துக்களின் அடிப்படை உரிமைகளை புறக்கணித்தது. ஒவ்வொரு முறையும் கோர்ட் சென்றே போராடி அனுமதி வாங்க வேண்டியிருந்தது. ஹிந்துக்களையும், ஹிந்து நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தி பொதுவெளியில் அவமதித்தது தி.மு.க. வும், அதன் கூட்டணி கட்சிகளும். அதற்கெல்லாம் மேலாக, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கோர்ட் தீர்ப்பு கொடுத்தும், அதனை அவமதித்தது.

தேர்தலில் அனைவரும் தவறாமல் நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும். ஹிந்து விரோத தி.மு.க. கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். ஹிந்துக்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்ட அ.தி.மு.க. - பா.ஜ. தலைமையிலான கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement