'மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி உறுதி: 50 ஆயிரம் ஓட்டில் சூலூரில் வெற்றி'
சூலூர்: சூலூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, ஜல்லிபட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கந்தசாமி இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். தொகுதி முழுதும் பாரபட்சமின்றி நகர, பேரூராட்சி, ஒன்றிய, ஊராட்சி பகுதிகளில் தொகுதி வளர்ச்சி நிதியை முழுமையாக பயன்படுத்தி, வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி இருக்கிறார்.
இவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். வேட்பாளர் பெயரை பொதுசெயலாளர் பழனிசாமி அறிவித்தபோதே, கந்தசாமி வென்றுவிட்டார். குறைந்தது 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
பா.ஜ., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் மக்கள் நலனை முன்னிறுத்தியே நமது கூட்டணியில் இணைந்துள்ளன.
தி.மு.க., ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என மக்கள் அன்றாடம் அல்லல்பட்டனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை, வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது. தி.மு.க., மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆட்சி மாற்றம் உறுதி. தி.மு.க.,வை மக்கள் விரட்டியடிப்பர்.
அ.தி.மு.க., ஆட்சியமைக்கும். பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பார். கோவை மாவட்டத்தில் கடந்த சட்டசபை தேர்தலைப் போலவே பத்துக்கு பத்து தொகுதிகளையும் அ.தி.மு.க., கைப்பற்றும். ஆட்சியமைத்ததும் கொடுத்த அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
அ.தி.மு.க., மத்திய அரசுடன் மிக இணக்கமாக இருந்ததால்தான், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், மருத்துவக் கல்லூரிகள் என ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தோம்.
மாநிலத்தில் நாம்தான் ஆட்சிக்கு வருவோம். மத்தியிலும் நமது கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. எனவே, தேவையான நிதியுதவிகளைப் பெற்று, அனைத்து நலத்திட்டங்களும் தமிழகத்தில் நிறைவேற்றப்படும்.
அரிசி அட்டைதாரர்களுக்கு பிரிஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன மானியம், நெசவாளர்களுக்கு 1,400 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் என அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் சூலூர் தொகுதிக்கு சிந்தாமல், சிதறாமல் கிடைக்கும். அனைத்துத் தரப்பு மக்களும் அ.தி.மு.க., வை ஆதரித்து, கந்தசாமியை 'ஹாட்ரிக்' வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு, வேலுமணி பேசினார்.