மாவட்டத்தில் 2,687 மாற்றத்திறனாளிகள் முதியோரின் தபால் ஓட்டு பதிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்த 2,767 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளில் 2,687 பேர் ஓட்டளித்தனர்.

ஓட்டுச்சாவடி மையத்திற்கு செல்ல முடியாத 85 வயது மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உடல் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது வீட்டிலிருந்தவாறு தபால் ஓட்டு அளிக்க தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் 23,795 வயது முதிர்ந்த மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், உளுந்துார்பேட்டை தொகுதியில் 873, ரிஷிவந்தியம் 519, சங்கராபுரம் 816, கள்ளக்குறிச்சி (தனி) 559 என மொத்தம் 2,767 வாக்காளர்கள் வீட்டிலிருந்தவாறு தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன்படி, கடந்த 17, 18 மற்றும் 19 ஆகிய 3 நாட்கள் தபால் ஓட்டு சேகரிக்கும் பணி நடந்தது.

இதற்காக அமைக்கப்பட்ட 37 குழுவினரும் தங்களது பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று ஓட்டுக்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், உளுந்துார்பேட்டை தொகுதியில் - 852, ரிஷிவந்தியம் 519, சங்கராபுரம் 816, கள்ளக்குறிச்சி (தனி) 559 என 2,687 நபர்களிடமிருந்து ஓட்டு சேகரிக்கப்பட்டது. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாலும், வெளியூருக்கு சென்றதாலும் 80 பேர் ஓட்டளிக்கவில்லை.

Advertisement