ராகுல் பிரசாரம் மொழிபெயர்ப்பு குழப்பம்; பின்னணியில் இருப்பது நிவேதித் ஆல்வா

6

- நமது நிருபர் -

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, அவரது பேச்சின் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அவற்றில், சோளிங்கர் உட்பட ஆறு தொகுதிகளில் மட்டும், காங்., முன்னாள் தலைவர் ராகுல், பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தி.மு.க., மற்றும் கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களுக்காக ராகுல் பிரசாரம் செய்யவில்லை.

இதனிடையே, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ராகுல் பேச்சை, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தப்பும் தவறுமாக மொழிபெயர்த்தது கேலிக்குள்ளானது. ராகுலின் பேச்சை, வழக்கமாக மொழிபெயர்க்கும் தமிழக காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து, தமிழக காங்., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில், ராகுலின் பேச்சுகளை பீட்டர் அல்போன்ஸ் சிறப்பாக மொழிபெயர்த்தார். எனவே, அவரை தன்னுடன் ஹெலிகாப்டரில் கூடவே அழைத்து சென்றார் ராகுல். தமிழகம் முழுதும், காங்.,கில் கிராம வார்டு கமிட்டி உருவாக்க, செல்வப்பெருந்தகைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டார்.

ஆனால், இப்போது அவரை ராகுலின் பேச்சை மொழிபெயர்க்க விடாமல், எதிர் கோஷ்டி நிர்வாகிகள் சிலர் சூழ்ச்சி செய்துஉள்ளனர்.

கட்சியின் மேலிட பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா உதவியுடன் பீட்டர் அல்போன்சை தடுத்துள்ளனர். அவருக்கு வயதாகி விட்டதால், காது கேட்கவில்லை என பொய்யான தகவலை சொல்லி, மொழிபெயர்ப்பாளரை மாற்ற வைத்துள்ளனர்.

பொன்னேரியில் அலிம் அல் புகாரி, சோளிங்கரில் செல்வப்பெருந்தகை, துறையூரில் சொர்ணா சேதுராமன் ஆகியோர், ராகுலின் பேச்சை மொழிபெயர்த்தனர். இதில், சோளிங்கரில் செல்வப்பெருந்தகை சொதப்பியது கேலிக்குள்ளானது.

எனவே, ராகுலின் உதவியாளர் அலங்கார், பீட்டர் அல்போன்சை தொடர்பு கொண்டு, குளச்சல், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் மொழிபெயர்ப்பாளராக பங்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரும் ஏற்றுக்கொள்ள, ராகுல் தன் ஹெலிகாப்டரில் பீட்டர் அல்போன்சை அழைத்து சென்றுள்ளார். நாங்குநேரியில் ஜோதிமணி எம்.பி., மொழிபெயர்ப்பாளராக பங்களித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement