மருத்துவராக சமூகத்துக்கு உதவுகிறேன்!

கடும் வறுமைக்கு இடையிலும், படித்து முன்னேறிய, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சவுந்தர்யா:

எங்களது சொந்த ஊர், உளுந்துார்பேட்டை. அப்பா, கரும்பு ஆலையில் கூலி வேலை பார்த்தார். அதனால், நாங்கள் கச்சிராயபாளையத்தில் குடியேறினோம். அம்மா இல்லத்தரசி.

அப்பாவும், அம்மாவும் படிக்காதவர்கள். அதனால், எங்களை படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

சாப்பாட்டுக்கு சிரமமான சூழலில் கூட என்னையும், அண்ணனையும் தனியார் பள்ளியில் படிக்க வைத்தனர். நோட்டு, புத்தகம் எல்லாம் மூத்த மாணவர்களிடம் வாங்கிதான் பயன்படுத்துவோம்.

அதில் எங்களுக்கு அசிங்கமோ, அவமானமோ, தயக்கமோ இருந்ததில்லை. படிக்க வேண்டும், படித்து முடித்ததும் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே பிரதான எண்ணமாக இருந்தது.

'கூலி வேலை பார்த்து, கடன் வாங்கி பிள்ளைகளை ஆங்கில வழி பள்ளியில் படிக்க வைக்கணுமா' என்று, எங்கள் முன்னாடியே பலரும் அப்பாவிடம் கேட்டிருக்கின்றனர். 'நான் சொகுசு வாழ்க்கை வாழ, கடன் வாங்கவில்லை; பிள்ளைகள் படிப்புக்காக வாங்குறேன்' என்று அப்பா கூறிவிடுவார்.

பிளஸ் 2 முடித்ததும், 'நீட்' தேர்வுக்கு தயார் ஆனேன். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில், அரசு கல்லுாரியில் இடம் கிடைக்காமல் போனது. அரசு உதவி பெறும் கல்லுாரியில் சேர்ந்தேன்.

முதல் பருவத்துக்கான கல்லுாரி கட்டணத்தை கடன் வாங்கிதான் கட்டினோம். ஆனால், இரண்டாவது பருவத்திற்கான கட்டணத்தை கட்ட முடியவில்லை.

அப்போது, ராணுவத்தில் மருத்துவராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர், எனக்கான கட்டணத்தை கட்டி உதவினார். நான்கு ஆண்டுகளும், அவரும், அவரது நண்பர்களும் தான், கல்லுாரி கட்டணம் கட்டி உதவினர்.

படிப்பு முடிந்து, நான் மருத்துவர் ஆனேன்; அண்ணன் இன்ஜினியர் ஆனார். நான் டாக்டர் கோட் போட்ட நிமிடம், எங்கள் அப்பா முகத்தில் இருந்த சந்தோஷத்துக்கு, இந்த உலகையே விலையாக கொடுத்தாலும் போதாது.

கடனை அடைக்க ஆரம்பித்தேன். கடன் இல்லாத வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது என்று, அதில் இருந்து மீண்டவர்களுக்கு தான் தெரியும். வீட்டு சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.

அண்ணனுக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. அதனால், அவன் படிப்பிற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். எத்தனையோ நல்ல உள்ளங்கள் உதவியால் தான், என் மருத்துவர் கனவு சாத்தியமானது.

அந்த உதவிகளை சமூகத்திற்கு திரும்பி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த நன்றிக்கடனை, ஏழை எளிய மக்களுக்கு, என் மருத்துவத்தின் வாயிலாக வட்டியும், முதலுமாக திருப்பிக் கொடுப்பேன்.

Advertisement