மே.வங்கத்தில் சேர்க்கப்பட்ட 7 லட்சம் புதிய வாக்காளர்கள்: விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
- டில்லி சிறப்பு நிருபர் -:
மேற்கு வங்கத்தில், 'படிவம் - 6'-ஐ பயன்படுத்தி, 7 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியதில் இருந்தே, பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.
வாக்காளர்கள் சேர்க்கப்படுவதற்கும் நீக்கப்படுவதற்கும் எதிராக, நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றன.
ஏற்கனவே இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் மேற்பார்வையில் தீர்ப்பாயத்தை அமைத்தது.
இந்த தீர்ப்பாயம், வாக்காளர்கள் நீக்கம் மட்டுமின்றி, சேர்க்கை தொடர்பான விவகாரங்களையும் விசாரிக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையில், லட்சக்கணக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யுமான மேனகா குருசுவாமி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில், நேற்றைய தினம் வாய்மொழியாக கோரிக்கை ஒன்றை முன் வைத்தார்.
அவர் கூறுகையில், ''மேற்கு வங்கத்தில், 'படிவம் - 6'ஐ பயன்படுத்தி, 7 லட்சம் வாக்காளர்கள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தேர்தல் கமிஷன் இதை தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளது.
''தீர்ப்பாயம் அனுமதி வழங்கினால் மட்டுமே வாக்காளர்கள் சேர்க்கை அல்லது நீக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும் என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
''அதை மீறி தேர்தல் கமிஷன் செயல்பட்டுள்ளது. 'படிவம் - 6'ஐ பயன்படுத்தி, புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டாலும் அவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்,'' என்றார்.
எனினும் இந்த விவகாரத்தை விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகார்ந்த, ''இது தொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்தால் விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என, திட்டவட்டமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, ''மேற்கு வங்கத்தில் இருந்து வரும் புகார்கள் மற்றும் மனுக்களின் எண்ணிக்கையை பார்த்தால், இதற்காகவே ஒரு தனி நீதிமன்ற அமர்வை உருவாக்க வேண்டியிருக்கும் போல் உள்ளது,'' என, தெரிவித்தார்.
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை