அ.தி.மு.க.,வை உடைப்பதற்காக ஸ்டாலின் போட்ட திட்டங்கள் தவிடுபொடி: பழனிசாமி ஆவேசம்

ஓமலுார்: ''அ.தி.மு.க.,வை உடைப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் போட்ட திட்டங்கள் தவிடுபொடியாகி விட்டன,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதியில் போட்டியிடும் பழனிசாமி நேற்று அங்கு பிரசாரம் செய்தார். அவருடன், பா.ம.க., தலைவர் அன்புமணியும் ஒரே வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார்.

ஜலகண்டாபுரத்தில் நடந்த பிரசாரத்தில் பழனிசாமி பேசியதாவது:
பா.ம.க.,வை போலவே, அ.தி.மு.க.,வை உடைக்க வேண்டும் என, தி.மு.க., பல அவதாரம் எடுத்தது. அதற்காக, முதல்வர் ஸ்டாலின் போட்ட திட்டங்கள் தவிடுபொடியாகின.

இனி, அ.தி.மு.க.,வை யும், பா,ம,க.,வையும் யாராலும் வீழ்த்த முடியாது. தமிழகத்தில் சிறுமியர் முதல் முதிய பெண்கள் வரை பாதுகாப்பு இல்லை. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

நம் செல்வம், நம் குழந்தைகள்; அந்த செல்வத்தை சீரழிக்கும் ஆட்சி வேண்டுமா? போதை பொருள் மாநிலமாக தமிழகம் உள்ளது என சட்டசபையில் பலமுறை பேசினேன்.

தி.மு.க., அரசு கண்டுகொள்ளவே இல்லை. கஞ்சா, போதை பொருள் விற்பனைக்கு தி.மு.க., துணை போகிறது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், மூன்று மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.

நெசவாளர்களுக்கு, தி.மு.க., ஆட்சியில் எந்த பலனும் கிடைக்கவில்லை. வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். மின் கட்டண உயர்வு சரி செய்யப்படும். மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு, மரம் ஏறும் கருவி இலவசமாக வழங்கப்படும்.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அம்மா மினி கிளினிக் திட்டம் தொடரும். விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்துவோம்.

தி.மு.க., ஆட்சியில் வீடு கட்ட முடியாத அளவுக்கு கட்டுமான பொருட்கள் விலையேற்றம் அடைந்துள்ளது. எனவே, தமிழகம் வளம்பெற, மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தில், இன்னும் இரண்டு வாரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அ.தி.மு.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால், பழனிசாமி முதல்வராக வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை, 12 முதல்வர்கள் ஆண்டனர். குழந்தையை கற்பழித்து கொன்ற சம்பவம் நடந்ததில்லை. ஆனால், கேடுகெட்ட தி.மு.க., ஆட்சியில் அன்றாடம் கொன்று குவித்து வருகின்றனர்.

பழனிசாமி, முதல்வராக இருந்தபோது, 11 மருத்துவக் கல்லுாரிகள் தொடங்கப்பட்டன, 3,000 பள்ளிகள், 200 கல்லுாரிகளை பழனிசாமி தொடங்கினார். பா.ம.க.,வில் கடந்த ஓராண்டாக நடைபெறும் நிகழ்வுகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் தான் காரணம். கட்சிக்குள் பிரச்னை உண்டு பண்ண வேண்டும் என்ற எண்ணம் நடக்காது.

ஸ்டாலின் அரசு, சாராயம், கஞ்சா கொடுத்து நம் பிள்ளைகளை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க., 20,௦௦௦ கோடி ரூபாய் செலவு செய்கிறது. ஆளத் தகுதியில்லாத, நேர்மையற்ற, திறமையற்ற தி.மு.க., அரசு தோல்வி அடைந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement