கோவில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: பக்தர்கள் அவதி
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் சாலையில், கழிவுநீர் வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், வங்கிகள் உள்ளிட்டவை உள்ளன.
இங்கு அனுமந்தபுரம் சாலையில் பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அனுமந்தபுரம் - ஜி.எஸ்.டி., சாலை சந்திப்புகளில் கழிவுநீர் தேங்கி வழிந்து ஓடுகிறது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழித்தபடி சாலையை கடந்து செல்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
சாலையில், கழிவுநீர் தேங்குவதால், இப்பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கழிவுநீரை அகற்ற ஊராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.