அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்காக 'செல்பேசி' செயலி: பாலு வாக்குறுதி

திருப்போரூர்: அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய 'செல்பேசி' செயலி துவங்கப்படும் என பா.ம.க., வேட்பாளர் பாலு உறுதி அளித்தார்.

திருப்போரூர் தொகுதியில், போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் பாலு, நேற்று முன்தினம் திருக்கழுக்குன்றம் பகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை திருப்போரூர் ஒன்றியத்தில் நாவலூர், ஏகாட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், மேலக்கோட்டையூரில் உள்ள காவலர் குடியிருப்புகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரம் செய்தார்.

வேட்பாளர் பாலு கூறியதாவது:

திருப்போரூர் தொகுதி வாக்காளர்களில் சுமார் 1.3 லட்சம் வாக்காளர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்றனர். அவர்களுக்கு குடிநீர் மற்றும் அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால் இந்த நிலையை மாற்றும் வகையில் எனது சொந்த முயற்சியில் 'செல்பேசி' செயலி துங்கப்படும்.

இதன் மூலம் வீட்டு பணியாளர்கள், எலெக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், தச்சர்கள் உள்ளிட்டோரின் சேவைகளை பெற முடியும். குடிநீர் உள்ளிட்ட தேவைகளையும் இந்த செயலி வாயிலாக நிறைவேற்றிக் கொள்ளமுடியும்.

செயலி மூலம் பெறப்படும் அனைத்து சேவைகளுக்கும் நியாயமான கட்டணம் மட்டும் பெறப்படும் என்பதால் மக்களுக்கு அனைத்து சேவைகளும் குறைந்த செலவில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், பா.ம.க., செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலர் ஏழுமலை, முன்னாள் மாவட்ட செயலர் வாசு, முட்டுக்காடு முன்னாள் ஊராட்சி தலைவர் பாஸ்கரன், நாவலூர் அ.தி.மு.க., நிர்வாகி பாஸ்கர், பா.ஜ.க., நிர்வாகி கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement