மாதர் தம்மை  மகிமைப்படுத்தும்  'பிங்க்' வண்ண  வாக்குச்சாவடிகள்

உடுமலை: ஜனநாயகத் திருவிழாவில், பெண்களின் ஆளுமையை அங்கீகரிக்கும் வகையில், உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், தலா ஒரு 'மகளிர் மட்டும்' ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் ஜொலித்து வருகின்றன.

சட்டசபை தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், தேர்தல் கமிஷன் மகளிர் வாக்காளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், மகளிர் மட்டும் பணியாற்றும் 'பிங்க்' மகளிர் ஓட்டுச்சாவடி அமைக்க அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக, உடுமலை தொகுதியில், வெங்கடகிருஷ்ணா ரோட்டிலுள்ள நகராட்சி பள்ளி, தயார் செய்யப்பட்டு வருகிறது.

அதே போல், மடத்துக்குளம் தொகுதியில், மைவாடி ஊராட்சி, நரசிங்காபுரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஓட்டுச்சாவடி எண் - 206, மகளிர் மட்டும் ஓட்டுச்சாவடியாக மாற்றப்பட்டு, தயார் செய்யப்படுகிறது.

இங்கு, முழுவதும் 'பிங்க்' நிற வர்ணம் பூசப்பட்டு, பிங்க் நிற தரை விரிப்பு, பலுான் மற்றும் தோரணங்களால் அலங்காரம் என, அனைத்தும் 'பிங்க்' நிறத்தில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

வாக்காளர்கள் குழப்பமின்றிச்செல்ல தரைப்பகுதியிலும், வண்ணக்கோடுகள் வாயிலாக, வழித்தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

முழுக்க முழுக்க பெண் தேர்தல் அலுவலர்கள், பெண் பூத் ஏஜென்ட்கள் மற்றும் பெண் போலீசார் மட்டுமே பணியாற்றும் இந்தச்சாவடியில், வாக்களிக்க வரும் பெண்களுக்கு பூக்கள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பெண்களால் பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இந்த 'பிங்க்' ஓட்டுச்சாவடிகள், சட்டசபை தேர்தல் களத்தில், ஒரு அழகிய மைல் கல்லாகத்திகழ்கின்றன.

Advertisement