ஒட்டன்சத்திரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்ற வாய்ப்பு தாருங்கள்: விடியல் சேகர் உருக்கம்

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என ,ஒட்டன்சத்திரம் தொகுதி அ.தி.மு.க., கூட்டணி த.மா.கா., வேட்பாளர் விடியல் சேகர் இறுதி கட்ட பிரசாரத்தில் பேசினார்.

ஒட்டன்சத்திரம் தொகுதி தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து இறுதி கட்டப் பிரசாரம் செய்த வேட்பாளர் விடியல் சேகர் நேற்று மாலை கூட்டணி கட்சியினருடன் டூவீலர்களில் ஒட்டன்சத்திரம் செக்போஸ்டில் இருந்து ஊர்வலமாக பஸ் ஸ்டாண்ட் வரை சென்றனர். வழி நெடுகிலும் திறந்த வேனில் சென்று விடியல் சேகர் தாமரை சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு பிரசாரம் செய்தனர்.

அப்போது அவர் பேசியதாவது: ஒட்டன்சத்திரம் தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றவும் விடியா தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றதும் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10,000 வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். மத்திய அரசுடன் அ.தி.மு.க., அரசு இணக்கமாக இருக்கும் என்பதால் மத்திய அரசு திட்டங்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். 30 ஆண்டுகாலம் ஒருவரே எம்.எல்.ஏ., வாக உள்ளார். ஆனால் விவசாயம் சார்ந்த இந்த தொகுதியில் வறட்சியை போக்கும் வகையில் நீர்ப்பாசன திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் புதிய நீர்ப்பாசன திட்டங்களை கொண்டு வந்து தொகுதியை வளம் கொழிக்கும் மண்ணாக மாற்றி காட்டுவேன். காய்கறிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கு காய்கறி ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என்றார்.

அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நல்லசாமி, த.மா.கா., மேற்கு மாவட்ட தலைவர் ராசியப்பன் கலந்து கொண்டனர்.

..

Advertisement