இறுதிகட்ட பிரசாரத்தில் கண்ணீர் விட்ட பா.ம.க., வேட்பாளர் 

விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியை தமிழகத்தில் முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என்று கண்ணீர் மல்க தனது இறுதிகட்ட பிரசாரத்தை பா.ம.க., வேட்பாளர் தமிழரசி நிறைவு செய்தார்.

விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ம.க., வேட்பாளர் தமிழரசி போட்டியிடுகிறார்.

தன்னை வேட்பாளராக அறிவித்த நாளில் இருந்து விருத்தாசலம் தொகுதியில் உள்ள பல்வேறு அமைப்பினர், வர்த்தகர் சங்கத்தினர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், பிரசாத்தின் இறுதிநாளான நேற்று, விருத்தாசலம் நகராட்சியில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் பேசுகையில், 'நான் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக,

பணிபுரிந்த போது, சிறந்த மருத்துவமனை என பலமுறை விருதுகளை வாங்கியுள்ளேன்.

அதேபோல், விருத்தாசலம் தொகுதியையும் தமிழகத்தில் சிறந்த தொகுதியாக மாற்றுவேன். அதுதான் எனது ஆசை. இந்த தொகுதியில் யாரை கொண்டு வந்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்று யோசித்து பார்த்து ஓட்டு போடுங்கள்.

ஓட்டு போடும் அனைவரும் எம்.எல்.ஏ., தான். அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. உங்கள் அனைவரையும் கைகூப்பி கேட்கிறேன். இந்த விருத்தாசலம் தொகுதியை யாரிடமும் விட்டு விடாதீர்கள்.

வழிவழியாக இந்த மண்ணில் உள்ளவர்கள்தான் எம்.எல்.ஏ., வாக வரவேண்டும் என எனக்கு ஆசை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பேசும் போது, உணர்ச்சி பொங்க கண்ணீர் சிந்தினார்.

அப்போது, அதைப்பார்த்த அ.தி.மு.க., நிர்வாகிகள் நீங்கள் கலங்காதீர்கள் நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுறவீர்கள் என அவரை ஆசுவாசப்படுத்தினர்.

அப்போது, அ.தி.மு.க., மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், நகர செயலர் சந்திரகுமார், பா.ம.க., மாவட்ட செயலர் கார்த்திகேயன், பா.ம.க., ஊடக பிரிவு செல்வா, வினோத், தமிழ் மற்றும் பா.ம.க., - அ.தி.மு.க., - தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement